பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.காே.சண்முகம்

86



தாயே வந்து விளக்கேற்று!


தாயே வந்து விளக்கேற்று! - ஞானத்
தமிழே வந்து விளக்கேற்று!
ஆயிரம் மனைகள் ஒளியுறவே - பகையாம்
அச்சம், மடமை விடைபெறவே
தோயும் அன்பினை நெய்யாய்ப் பெய்தே - உள்ளத்
தூய்மைத் துணிவைத் திரியாய்ச் செய்தே

(தாயே வந்து விளக்கேற்று! )




கனியும் இதய கருணைச் சுடராக - அறிவின்
கனவதே சாந்தக் கொழுந்தாய்ப் படர்ந்தாட
இனிஇலை இருளாம் அரக்கனின் வேலை! - எங்கும்
எழுந்தது காண் காண் அருளதன் லீலை!

(தாயே வந்து விளக்கேற்று! )



சத்தியம் எனுமொரு மணிவிளக்கே - தெய்வ
தருமம் எனுமொரு அணிவிளக்கே
வித்தகம் எனுமொரு புகழ்விளக்கே - உன்றன்
வீட்டினில் மன்றினில் திகழ் விளக்காகத்

(தாயே வந்து விளக்கேற்று! )


(ராகம்: புன்னாகவராளி)