பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

9


"அதை விட்டுக் கலை உலகத்துக்கு நீங்கள் வந்தது எப்படி ?”

கலை உலகத்துக்கு நானாகவும் போகவில்லை; அதுவாகவும் என்னைத் தேடி வரவில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே என்னையும் கலையையும் ஒன்று சேர்த்தது.”

“அது என்ன சூழ்நிலை, சந்தர்ப்பம் ?”

“வீட்டிலே சோறில்லை; டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அப்போ அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் இன்னிக்குப் பலரைக் கலைஞர்களாக்கியிருக்கிறது. ‘பேக்ட்'டை யாரும் சொல்ல மாட்டேங்கிறானுங்க. வசதி வந்ததும் ‘ஹிஸ்டரி'யையே மாத்திச் சொல்றானுங்க. ‘ராயல் பேமிலி'ங்கிறானுங்க. கலைக்காகவே அவதாரம் எடுத்ததா வேறே அளக்கிறானுங்க. என்ன செய்யறது ? உண்மை உறங்குது; பொய் பொன்னாடை போர்த்திக்கிட்டு ஊர்வலம் வருது. என்னைப் பொறுத்தவரை டிராமா கம்பெனி சோறுதான் என்னை ‘ஆக்ட'ராக்கியிருக்கிறது. இதுதான் ‘பேக்ட்’.

“ஒரு கலைஞன் முன்னேற வேண்டுமானால் மற்ற கலைஞர்களை முன்னேற விடாமல் தடுத்தால்தான் முன்னேற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?”

“இல்லை; சரக்கு உள்ளவன் அப்படி நினைக்கமாட்டான், அந்த வேலையைச் செய்யவும் மாட்டான்.” “கலைஞன் என்பவனுக்கு இலக்கணம் ஏதாவது...”

“உண்டு; பஞ்சமாபாதகத்தில் அவன் ஒரு பார்ட்னர்”

“கலைஞன் கலைஞனாக மட்டும் இருந்தால் போதுமா ? அவன் தருமோபதேசியாகவும் தத்துவ ஞானியாகவும் கூட இருக்க வேண்டுமா ?"