பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

விந்தன்


ஒரு படுக்கை விரிப்பை எடுத்து பெஞ்சியின் மேல் போட்டு, என்னை மறைக்கும் அளவுக்கு அதைக் கீழே தொங்கவிட்டு, அதுக்கு மேலே அவர் உட்கார்ந்துட்டார்...”

“அதாவது, டிராமாவிலே எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதற்கு முன்னால் ரயிலில் டிக்கெட் இல்லாமல் எப்படிப் பிரயாணம் செய்வது என்பதை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டார்!”

“இவருடைய கண்ணியம் தான் இப்படி இருந்ததுன்னா, அந்த நாள் ஸ்டேஷன் மாஸ்டர்கள் கடமை எப்படி இருந்தது, தெரியுமா ? இதை விட வேடிக்கையாயிருந்தது. சிதம்பரம் ஸ்டேஷன்லே பெட்டியோடு பெட்டியா நாயுடு என்னையும் இறக்கிவிட்டார். பெட்டியைத் துக்கி என் தலையிலே வெச்சுட்டு அவர் முன்னால் நடந்தார். ஒரு பய டிக்கெட் கேட்கணுமே? மூச்! எல்லாரும் ‘சல்யூட்’ அடிச்சி எங்களை வெளியே விடறானுக. விஷயம் என்னடான்னா, நாயுடு வசூலாகாத நாடகமாப் பார்த்து அவனுகளுக்கெல்லாம் ‘ஓசிப் பாஸ் கொடுப்பாராம்.”

“இந்த உலகமே ஒரு திறந்த புத்தகம் என்று சொல்வார்கள். அதை நீங்கள் அப்போதுதான் படிக்க ஆரம்பித்தீர்கள் போல் இருக்கிறது!”

“ஆமாம், அதைவிட நல்ல புத்தகம் இல்லேங்கிறது இப்போ என் கருத்து.”

“டிராமாவிலே உங்களுக்கு என்ன வேஷம் கிடைத்தது?”

“அரிச்சந்திரனிலே லோகிதாசனா வந்து ‘அம்மா பசிக்குது, அப்பா பசிக்குதுன்னு அழற வேஷம்; நல்லதங்காளிலே ஏழு பிள்ளைகளிலே ஒருத்தனா வந்து கிணத்திலே விழுந்து சாகற வேஷம்; கிருஷ்ண லீலாவிலே நச்சுப் பால் கொடுக்க வரும் பூதகியைக் கொல்ற பாலகிருஷ்ணன் வேஷம். இந்த வேஷங்களோடு அப்பப்போ ஸ்டேஜுக்கு வந்து சர்க்கஸ் டான்ஸும் ஆடணும்...”

“அது என்ன சர்க்கஸ் டான்ஸ்?"