பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

19


3. வந்தது ‘பிளைமவுத்'கார்


வீட்டுக்குத் தெரியாமல் வந்துதானே நாயுடு கம்பெனியில் சேர்ந்தீர்கள் ? உங்களை யாரும் தேடிக் கொண்டு வரவில்லையா ?”

“வந்தாக வந்து என்னை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்தாக. ஆனா இப்போ எனக்கு வீடு பிடிக்கல்லே; டிராமா கம்பெனிதான் பிடிச்சது. மறுபடியும் போயிடறதுன்னு திட்டம் போட்டேன். இந்தத் தடவை என் தம்பி பாப்பாவும் என்னோடு வரேன்னான்; ‘சரி'ன்னேன். போற அன்னிக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போனாத் தேவலைன்னு நினைச்சோம். என்னத்தை, எங்கே சாப்பிடறது ? ரயில்வேக்காரன் ஏமாறாப்போல எந்த ஓட்டல்காரன் ஏமாறேங்கிறான்? சுற்றுமுற்றும் பார்த்தோம். யார் கொடுத்த வாழைப்பழத்தாரோ, வீட்டிலே இருந்தது. ரெண்டு பேருமாச் சேர்ந்து அதிலே பாதியைக் காலி செஞ்சோம். கைச் செலவுக்குக் காசு வேண்டாமா ? வீட்டிலே யார்யாரோ, எது எதுக்கோ வெச்சிருந்த காலணா அரையனாக்களையெல்லாம் எடுத்துச் சேர்த்தோம். கிட்டத்தட்ட ஒரு ரூபாய் சேர்ந்தது. சரி, புறப்படுவோமா ?ன்னேன். ‘எங்கே, நாயுடு கம்பெனிக்கா ?ன்னான் தம்பி. இல்லே, சாமண்ணா அய்யர் கம்பெனிக்கு. அவர் இப்போ மைசூரிலே இருக்கிறாராம். அங்கே போயிடுவோம்'ன்னேன். ‘சரி'ன்னு அந்தப் பாதிவாழைப்பழத்தாரைக்கூட வீட்டிலே வைக்காம அவன் கையோடு எடுத்துக்கிட்டான். வேண்டாண்டா, வெச்சிடு'ன்னேன்.” கேட்கல்லே; ‘வழியிலே பசிச்சா என்ன செய்யறது?'ன்னு அதையும் எடுத்துக்கிட்டு வந்துட்டான்.