பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

விந்தன்


ரெண்டு பேரும் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போறதுக்காக வால்டாக்ஸ் ரோடு வழியா வந்தோம். அப்போ அந்த ரோடு முனையிலே ஒரு டிராம் டெர்மினஸ் இருக்கும். அங்கே ஒரு தண்ணித் தொட்டி இருக்கும். அதிலே ஒரு ‘காக்காக் குளியல்’ குளிச்சிட்டுப் போலாம்னு வாழைத் தாரைக் கீழே வெச்சிட்டு, சட்டையைக் கழற்றி ரோடு போடுவதற்காக அங்கே கொட்டி வைச்சிருந்த சரளைக் கல் குவியல் மேலே வெச்சோம். குளியலை முடிச்சிட்டு வந்து என் தம்பி சட்டையை எடுத்தான். எடுத்த வேகத்தில் அதிலிருந்த காசெல்லாம் சரளைக்கல் குவியல்வே விழுந்து கல்லோடு கல்லா கலந்துவிட்டது. விடுவோமா ? -அக்கம் பக்கத்திலே யார் வராங்க, போறாங்கன்னு கூடக் கவனிக்காம ரெண்டு பேருமா கல்லை வாரிப் பின்னாலே விட்டுக்கிட்டே காசை ஒவ்வொண்ணாப் பொறுக்கி எடுத்தோம். டேய், யாரடா அது? ஏண்டா, கல்லை வாரி என்மேலே விடறீங்க ?ன்னு ஒரு குரல்-திரும்பிப் பார்த்தோம்; கையிலே குண்டாந்தடியோடு ஒரு போலீஸ்காரன்! நிற்போமா ? காசை மறந்து, வாழைப்பழத்தாரையும் மறந்து எடுத்தோம் ஓட்டம்!”

“ஸ்டேஷனுக்குப் போய்த்தான் நின்றீர்களா ?”

“வேறே வழி ? வண்டி வர வரையிலே அங்கேயே சுத்திக்கிட்டு இருந்து, எப்படியோ மைசூர் போய்ச் சேர்த்தோம். அவர் எங்களைக் கம்பெனியிலே சேர்த்துக்கிட்டார்...”

“அவர் ஒரு கிராட்ஜூவேட், இல்லையா ?”

“ஆமாம், அந்த நாள் பி.ஏ. அவர். ‘டம்பாச்சாரி’ நாடகத்திலே அவருக்கு நல்ல பேர்; பதிமூணு வேஷம் போட்டு ஆடுவார். அண்ணன் சாரங்கபாணிக்கும் அந்த நாடகத்திலே அப்போ நல்ல பேர்; அவரைப் போலவே இவரும் பதிமூணு வேஷம் போடுவார்.”

“கம்பெனி முதலாளி பி.ஏ. என்றால் அங்கேயும் ‘படித்தவன் படிக்காதவன்’ என்கிற வித்தியாசம் இருந்திருக்குமே ?"