பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

29


போவேன். என்னோடு என்.எஸ்.கே.யும் வருவார். அது ‘தள்ளு மாடல் வண்டி அடிக்கடி ‘என்னை ஏன் தள்ளலே ? தள்ளினாத்தான் ஆச்சு ன்னு கோவிச்சுக்கிட்டு நின்னுடும். நான் ஸ்டியரிங்கைப் பிடிச்சுக்குவேன்; என்.எஸ்.கே.தான் இறங்கி இறங்கி மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கத் ‘தள்ளுத் தள்ளு'ன்னு தள்ளுவார். வண்டி ஸ்டார்ட் ஆனதும் ஏறி உட்கார்ந்துக்கிட்டு, ‘டேய், ராதா! இன்னிக்கு நீ உன் வண்டியை என்னைத் தள்ள வைக்கிறே இல்லே? என்னிக்காவது ஒரு நாள் உன்னை நான் என் வண்டியைத் தள்ள வைக்கிறேன்,பார்ன்னு சொல்லுவார். இதை அவர் கடைசி வரையிலே மறக்கல்லே; அப்படியே ஞாபகம், வைச்சுக்கிட்டிருந்தார். ஒரு காருக்கு நாலு காரோடு வாழற காலம் வந்தது. அந்தக் காலத்திலே என்னைப் பார்க்கும் போதெல்லாம், ‘ஏண்டா ராதா, என் காரிலே ஒரு நாள் வாயேண்டா ‘ம்பார். ‘ஏன், வண்டி தள்ள வைக்கவா?ன்னு நான் மெல்ல நழுவிவிடுவேன். பாவம், கடைசி வரையிலே சபதம் நிறைவேறாமலேயே அவர் கண்ணை மூடிவிட்டார்.”

“அவ்வளவு சீக்கிரம் அவர் கண்ணை மூடிவிட்டதற்கு அளவுக்கு மீறி மது அருந்தியதும் ஒரு காரணம் என்று சிலர் சொல்கிறார்களே ?”

“இருக்கலாம்; எத்தனையோ காரணங்களில் அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்.”

“அதனால் தான் நீங்களும் இப்போது மது, மாமிசம், சிகரெட் ஆக மூன்றையுமே விட்டுத் தொலைத்துவிட்டீர்கள் போலிருக்கிறது ?”

“நான் விட்டதற்குக் காரணம் வேறே

“அது என்ன காரணம் ?”

“நான் ஒரு பெண்ணுக்குக் கொடுத்த வாக்குத்தான் அதற்குக் காரணம்.”

“யார் அந்தப் பெண் ?"