பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

விந்தன்


அடிச்சிப் போட்டுட்டாங்களாம். அண்ணே!ன்னேன். ‘அட, பாவிகளா!ன்னு அவர் தலையிலே கையை வைச்சிக்கிட்டுக் கீழே உட்கார்ந்துட்டாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம்; கோவணத்தை மறந்து அவர் அழறதை வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன்.”

“அய்யர் இல்லையா ?”

“இல்லே, வெளியே போயிருந்த அவரு அப்பத்தான் வந்தாரு என்னடா சங்கதி?ன்னாரு அவர்கிட்டேயும் காந்தி செத்துட்டாராம். அண்ணன் அழிறாரு, நானும் அழறேன்ன்னேன். அவர் யார் சொன்னார்கள் அப்படி? னாரு. கடைத் தெருவிலே எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்களாம்னு நான் சமாளிச்சேன். போடா, போ ? நான் இப்போ கடைத் தெருவிலேயிருந்துதானே வரேன் ? அங்கே யாரும் அப்படிப் பேசிக்கல்லே, காந்திஜியும் எந்த ஆபத்தும் இல்லாமல் போய்த்தான் தில்லையாடியையும், வள்ளியம்மையின் சொந்தக்காரர்கள் சிலரையும் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கார்ன்னு சொல்லி, சாரங்கபாண்ணி அண்ணனைச் சமாதானம் சேஞ்சி வைச்சாரு; என்னையும் சமாதானம் சேஞ்சி வைச்சாரு. எனக்குக் கட்டிக்க வேறே துணியும் கொடுத்தாரு அண்ணன் சாரங்கபாணியின் காந்தி பக்தி அப்பவே அப்படி இப்போ கேட்கணுமா?”

“அவருடைய சேவைக்காக இங்கே காங்கிரஸ் ஆட்சி நடந்த காலத்திலேயே ஒரு எம்.எல்.சி. சீட்டாவது அவருக்குக் கொடுத்து அவரைக் கெளரவித்திருக்கலாம்; தவறி விட்டார்கள்”.

‘தப்பு அவங்க மேலே மட்டும் இல்லே, சாரங்கபாணி அண்ணன் மேலேயும் இருக்கு...”

“அது என்ன தப்பு ?”

“எடுத்ததுக்கெல்லாம் ‘நான், நான்’னு முந்திரிக் கொட்டை மாதிரி தலையை நீட்டாம இருந்தது அவர் தப்புதானே ?"