பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

47


அர்ப்பணமாயிக்கிட்டிருக்கிறதா சொல்லுவாங்க. உண்மையிலே யாருக்கு அர்ப்பணமாயிக் கிட்டிருந்ததோ, அது எனக்குத் தெரியாது. இப்பத்தானே அதுக்கு ஒரு மரியாதையும், அதை ஆடறவங்களுக்கு ஒரு கவுரவமும் ஏற்பட்டிருக்கு ?”

“சங்கீதம் ?”

“அதுக்கு ஏது அப்போ தனி மவுசு ? நாடகத்தோடு சேர்ந்தாத்தான் மவுசு. ஒருவேளை பொம்மனாட்டி தனியா பாடியிருந்தா அந்த மவுசு அதுக்கு அப்பவே ஏற்பட்டிருக்குமோ, என்னவோ ? அதுக்கு அந்த நாளிலே யாரும் துணியலே. ஆம்பளை தனியாப் பாடினா யார் கேட்கிறது? அவன் பாட்டை அவனேதான் கேட்டுக்கணும். இந்தக் கஷ்டத்துக்காகத்தான் அந்தக் காலத்துப் பெரிய மனுஷர்களான எப்.ஜி.நடேசய்யர், டாக்டர் ரங்காச்சாரி யெல்லாம்கூட எங்க நாடகத்தைப் பார்க்க அடிக்கடி வருவாங்க..”

“டாக்டர் ரங்காச்சாரியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?”

“நல்லாப் பார்த்திருக்கேன். இப்போ இருக்காப்போல கண்ணுக்கு ஒரு டாக்டர், காதுக்கு ஒரு டாக்டர், பல்லுக்கு ஒரு டாக்டர்னு அப்போ ஏது? எல்லாத்துக்கும் ஒரே டாக்டர்தான். அவர்தான் ரங்காச்சாரி. அவர்கிட்டே எப்பவும் ரெண்டு கார் இருக்கும். ஒண்ணு ரோல்ஸ்ராய்ஸ், இன்னொண்ணு போர்டு. பணக்காரங்க வீட்டுக்கு ரோல்ஸ்ராய்ஸிலே போவார்; ஏழையின் வீட்டுக்கு போர்டிலே போவார். எங்கே போனாலும் பெட்ரோல் செலவுக்காவது அவருக்கு ஒரு ரூபா விஸிடிங் பீஸா கொடுத்துடனும். கொடுக்கலேன்னா இன்னொரு தடவை கூப்பிட்டா வரமாட்டார்...”

‘எப்படி வரமுடியும்? பெட்ரோலை யாரும் தருமத்துக்குப் போடமாட்டாங்களே!"