பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

விந்தன்


"நாடகம் பார்க்க வரப்போல்லாம் அவர் எங்களைப் பார்க்கத் தவற மாட்டார். மேடைக்கு வந்து, ‘கண்ணைக் காட்டும்பார். ‘நாக்கை நீட்டு'ம்பார்; வெளிக்குப் போறியா ?ம்பார், ‘இல்லே'ன்னா ‘கீரை சாப்பிடும்பார்.”

“எல்லாம் சரி, அவர் மட்டும் காப்பி சாப்பிட்டுக் கொண்டு நோயாளிகளைக் காப்பி சாப்பிட வேண்டாமென்று சொல்லும் வழக்கம் அவரிடமும் உண்டா ?”

“அதுதான் கிடையாது; சாதாரண ஜனங்களைப் போல அவரும் ‘பழையது’ சாப்பிடுவார்.”

“அது என்ன பழையது ?”

“பொழுது விடிஞ்சதும் டிப்ன், காப்பியெல்லாம் அப்போ ஏது ? அநேகமா எல்லாருடைய வீட்டிலும் ராத்திரி மிச்சமான சோத்திலே தண்ணியைக் கொட்டி வைச்சிருப்பாங்க. காலையிலே அந்தச் சோத்திலே உப்பைப் போட்டு ஊறுகாயைத் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுவாங்க. அதுதான் பழையது. ஆனா இந்தப் பழையதுக்கும் டாக்டர் ரங்காச்சாரி சாப்பிட்ட பழையதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.”

“அது என்ன வித்தியாசம்?”

“ராத்திரி வடிச்ச சோத்திலே தண்ணியைக் கொட்றதுக்குப் பதிலா அவர் பாலைக் காய்ச்சிக் கொட்டி, அந்தப் பால்லே ஒரு துளி தயிரைப் புரை குத்தி வைச்சிடுவாார். பொழுது விடிஞ்சதும் பார்த்தா அந்தச் சோத்தோடு தயிரும் தோய்ஞ்சிருக்கும். அதுதான் டாக்டர் ரங்காச்சாரி சாப்பிட்டுக்கிட்டிருந்த பழையது. அந்தப் பழையதைத்தான் நானும் அன்னியிலேருந்து இன்னியவரையிலே சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். அது மட்டுமில்லே, முதல் நாள் ராத்திரியே தண்ணியைக் காய்ச்சி ஆற வைச்சி, மறு நாள் பொழுது விடிஞ்சதும் அவர் குளிப்பார். அதே மாதிரி நானும் குளிச்சிக்கிட்டிருக்கேன்..."