சிறைச்சாலைச் சிந்தனைகள்
61
ராவணன், இவர் பெயர் ஈ.வே.ராமசாமி. எப்போதுமே இவர் சாமியார் மாதிரிதான் இருப்பார். இப்போ ஊரெங்கும் ஒரே பரபரப்பை உண்டாக்கிக்கிட்டிருக்கே சுயமரியாதை இயக்கம், அந்த இயக்கத்துக்கு இவர்தான் தலைவர். இப்போ வெளியே வந்தாங்களே ஒரு அம்மா, அந்த அம்மா மண்டோதரியில்லே, இவர் மனைவி நாகம்மை, அவங்க கூப்பிட்டது ராமன் தம்பி லட்சுமணனை இல்லே, வேலைக்காரன் லட்சுமணனை'ன்னு விளக்கிக்கிட்டே போனார்....”
“ஈ.வே.ரா.வைச் சுற்றி உட்கார்ந்திருந்த இளம் விதவைகள் யார் என்று நீங்கள் கேட்கவில்லையா ?”
“கேட்டேன்; அவங்க சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவங்க, மறுமணம் சேஞ்சிக்கிறதுக்காக வந்திருக்காங்கன்னு சொன்னார்.”
‘மாப்பிள்ளைகள் ?”
“தாங்களாகவே வருவதும் உண்டாம்; பெரியாரும் தேடி வைப்பதுண்டாம்.”
“அந்த வேலையைக் கன்னிப் பெண்களுக்கும் அவர் செய்யக் கூடாதா? அவர்களில் பலருக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி, கலியாணமாவது கஷ்டமாயிருக்கிறதே?”
“கன்னிப் பெண்களுக்காகக் கவலைப்பட எத்தனையோ பேர் இருப்பாங்க. கைம்பெண்களுக்காக கவலைப்பட அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, பெரியாரைத் தவிர வேறே யாரும் இருக்கிறதா தெரியலையே?”
“அதற்கெல்லாம் ஒரு தனித் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் அவரைத் தவிர வேறு யாருக்கும் வர மாட்டேன் என்கிறது!”
“ஏன் வரல்லே?”
“அவரிடம் இருப்பதுபோல் மற்றவர்களிடம் பணம் இல்லாமல் இருப்பதுகூட அதற்கு ஒரு காரணமாயிருக் கலாம்..."