பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

63


"சரி, அதை விடுங்கள், ஈ.வே.ரா.வை முதன் முதலாகப் பார்த்தீர்களே, அவர் உங்களிடம் என்ன சொன்னார் ?”

“ஒண்ணும் சொல்லல்லே; என்னையும் பொன்னையாவையும் பார்த்ததும் பொதுவா ‘வாங்கய்யா'ன்னு சொன்னதோடு சரி. அதுக்கு மேலே அவர் செய்ய வேண்டிய உபசாரத்தையெல்லாம் அவர் மனைவியார் நாகம்மை அண்ணியார்தான் சேஞ்சாங்க.”

“யார் வந்தாலும் அவர்கள்தான் உபசாரம் செய்து அனுப்புவார்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்புறம்... ?”

“ஈரோடிலிருக்கிற எங்க கம்பெனி சேலத்துக்குப் போச்க...”

“அங்கேயும் ஏதாவது தகராறா ?”

“தகராறு கம்பெனியிலே வரல்லே; வழியிலே வத்துடிச்சி!”

“சரிதான், அதுவும் தன் வழியை மாற்றிக்கொண்டுவிட்டது போலிருக்கிறது. அது என்ன தகராறு ?”

“ஒருநாள் ராத்திரி நாலு பேரோடு சேர்ந்து தான் சினிமாவுக்குப் போனேன். திரும்பறப்போ ஒரு ஜட்கா வண்டியைப் பிடிச்சோம். அவன் என்னடான்னா, ‘நாலு பேரைத்தான் வண்டியிலே ஏத்துவேன், அஞ்சாவது ஆசாமியை ஏத்தவே மாட்டேன்’னு அடம் பிடிச்சான்.”

“அந்த ஆசாமி நீங்களாத்தான் இருந்திருப்பீர்கள். “

“அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?”

“தகராறு வர வேண்டுமானால் மாமூல்படி அது உங்கள் மூலமாகத்தானே வர வேண்டும்?”

“நல்ல ஆளய்யா, நீங்க! நானா தகராறுக்குப் போறேன், அவங்க தானே தகராறுக்கு வராங்க?"