பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எம்.ஆர். ராதா பேசுகிறார்!

1971ம் ஆண்டு மே 1ந் தேதி, ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் வெறிச்சோடிக் கிடந்த சென்னை தேனாம்பேட்டை போயிஸ் ரோட் வீடு கலியான வீடுபோல் ‘கலகல’ வென்று காட்சியளிக்கிறது. வெளியே பல கார்கள் நிற்கின்றன. சில கார்கள் வருவதும் போவதுமாயிருக்கின்றன. ஆணும் பெண்ணுமாக மக்கள் அங்கங்கே சிறு சிறு கூட்டமாக நின்று, மாடியைப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதுமாக இருக்கிறார்கள். மேலேயும் கீழேயுமாகச் சிலர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் போகிறேன். ராதாவின் குரல் ஒலிக்கிறது:

“என்னைப் பார்க்கவா இத்தனை பேரு? நான் என்ன, ராஜாஜியைப் போல, பெரியாரைப் போல, காமராஜைப் போல பெரிய மேதையா? சாதாரண நடிகன்தானே? என்னைப் பார்க்க ஏன் இப்படி விழுந்தடிச்சிக்கினு வர்றீங்க?... சரி, பாாத்தாச்சா?... போங்க ... மாலை வேறே கொண்டாந்து இருக்கீங்களா?... ஐயோ, ஐயோ ... சரிசரி, போடுங்க... போட்டாச்சா?... போயிட்டு வாங்க!”

ராதாவின் குரலா இது, இத்தனை சன்னமா யிருக்கிறதே!...

வியப்பு அடங்கு முன் இன்னொரு குரல் கேட்கிறது:

“உங்கள் குரல் முன்னைப் போல்...”

“அஞ்சி வருஷமாப் பேசாம இருந்த குரல் இல்லையா ? அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் கட்டினாச் சரியாயிடும்!” என்கிறார் ராதா.