சிறைச்சாலைச் சிந்தனைகள்
69
அப்படிக் கொடுத்து உதவியவர்களிலே ஒருத்தர்தான் பெரம்பூர் ரொட்டிக் கடைக்காரர்.”
“பெயர் ?”
“ஞாபகமில்லை. இந்த நாடகக் கம்பெனிங்க இருக்கே, அதுங்க கொடுத்தா கொடுத்துக்கிட்டே இருக்கும்; கேட்டா கேட்டுக்கிட்டே இருக்கும். நான் போய்ச் சேர்ந்த காலம் கேட்டுக்கிட்டே இருந்த காலம். பெரம்பூர் ரொட்டிக் கடைக்காரராலே ஒரு அளவுக்கு மேலே கொடுத்து உதவ முடியல்லே.... ராணிப் பேட்டையிலே வரதராஜுலு செட்டியார்னு ஒருத்தர்; பெரிய ஜவுளிக் கடை வைச்சிருந்தார். அவர்கிட்டே பணமும் இருந்தது; கொடுக்க மனமும் இருந்தது. அவருடைய உதவியைக் கொண்டு ராணிப்பேட்டையிலே கொஞ்ச நாள் நாடகம் போட்டுவிட்டுச் சோளிங்கப்புரத்துக்குப் போனோம். அங்கே நாடகம் நடக்கல்லே...”
“வேறு என்ன நடந்தது?”
“கலகம்!”
“கலகமா ?”
“ஆமாம். அந்த நாளிலே அப்படித்தான். எந்த ஊருக்குப் போனாலும் ஒண்ணு நாடகம் நடக்கும். இல்லேன்னா, கலாட்டா நடக்கும்.”
“தேவலையே, கலாட்டாவையும்,அந்தக் காலத்து மக்கள் காசு கொடுத்துப் பார்த்திருக்கிறார்களே, அதற்காக அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.”
“காசு கொடுத்துப் பார்க்க வர்றவங்களாலே எந்தக் கலாட்டாவும் இருக்காது; காசு கொடுக்காமப் பார்க்க வர்றானுங்களே, அவனுங்களாலே தான் எல்லாக் கலாட்டாவும் வரும்.”
“அன்றைக்கு என்ன கலாட்டா ?"