பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இனிமே கலியாணம் நடக்கிறதாயிருந்தா என் பொண்ணுக்கும் பிள்ளைக்கும்தான் நடக்கணும்!”

“சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூட இவ்வளவு தூரம் சொல்லத் துணியும் உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே எனக்குப் புரியவில்லை!”

“ஒருவனுடைய பெருமை மட்டும் உலகத்துக்குத் தெரிஞ்சாப் போதாது, அவனுடைய பலவீனங்களும் தெரியணும்னு நினைப்பவன் நான். இல்லேன்னா, பொதுமக்களை ஏமாத்தறதாயில்லே அர்த்தம் ?”

“கரெக்ட் கலியாணத்துக்கு அப்புறம் உங்கள் நாடக வாழ்க்கை எப்படி இருந்தது?”

“ரொம்ப மோசம்! சண்டையில்லாத நாளே கிடையாதுன்னு ஆயிடிச்சு. ‘இந்துமுஸ்லீம்’ ஒற்றுமைக்காக ‘ராமதாஸ்’ நாடகம் நடக்கும். கடைசிக் காட்சியிலே நவாப் ராமதாஸைக் கட்டிப் பிடிச்சுக்குவாரு. ‘அது தப்பு'ன்னு முஸ்லீம்கள் வம்புக்கு வருவாங்க; ‘தப்பில்லே'ன்னு இந்துக்கள் அவங்களோடு சண்டைக்குப் போவாங்க. அவங்களையும் இவங்களையும் சமாதானம் சேஞ்சி வைக்கிறதுக்குள்ளே ‘போதும், போதும்’னு ஆயிடும். எந்த நாடகத்திலாவது ஒரு காட்சியோ, பாட்டோ நல்லா இருந்துட்டா வந்தது ஆபத்து, நாடகத்தை மேலே நடத்தவிட மாட்டானுங்க, ‘ஒன்ஸ்மோர், ஒன்ஸ்மோர்’னு கத்திக் கலாட்டா பண்ணுவாங்க. ஒரு நாள் எனக்குக் கோவம் வந்துடிச்சி. ‘நடந்து முடிஞ்ச நாடகத்துக்குகூட நீங்க ஒன்ஸ்மோர் கேட்பீங்க, நாங்க உடனே அதைத் திருப்பி நடத்தணுமா ?ன்னு கேட்டுட்டேன். இந்த மாதிரி நான் எதற்கும் பணியாம எதிர்த்து நிற்கிறது பொன்னுசாமிப் பிள்ளைக்குப் பிடிக்கல்லே; அவர் அந்தமாதிரி நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கல்லே. ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்.”

“அப்புறம்?"