பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

விந்தன்


மேலே செல்கிறேன். ராதா தம் உறவினர்களுடன் பேசிக் கொணடிருக்கிறார். “உங்கள் உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது; நான் டிஸ்டர்ப் செய்ய வந்துவிட்டேனோ?” என்கிறேன்.

“டிஸ்டர்ப் என்ன, டிஸ்டர்ப்? நான் என்ன, பெரிய சையன்டிஸ்ட்டா? விண்வெளி ஆராய்ச்சி சேஞ்சிக்கிட்டு இருக்கேனா? சாதாரண ஆக்டர் நீங்களெல்லாம் பேசற பேச்சுக்குக் கொஞ்சம் பாலிஷ் கொடுத்து மேடையிலே பேசறவன். அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ஆக்டர்னா நீங்க ஒவரா நினைச்சிடாதீங்க... ஆ!... தொண்டை கட்டிக்கிச்சி... இப்ப நான் ‘ரத்தக் கண்ணீர் ராதா’ வாயிட்டேன்... ஏய், காந்தா!... யார் அங்கே...?”

ராதா சிரிக்கிறார். அப்போது அவர் மகன் வாசு வருகிறார். அவரைப் பார்த்ததும், “வாசு உங்களை விட நன்றாக நடிக்கிறார் என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்களே?” என்கிறார் டாக்டர்.

“அதை நான் ஒத்துக்க முடியாது. டி.வி.எஸ்.ஸை எடுத்துக்குங்க அவருடைய பையனுங்க அந்த ஸ்தாபனத்தை இப்ப பிரமாதமா முன்னுக்குக் கொண்டாந்திருக்காங்க. அதை வெச்சி ஆதியிலே அதுக்குக் காரணமாயிருந்த டி.வி.எஸ். திறமையிலே குறைஞ்சவருன்னு சொல்லி விட முடியுமா?” என்கிறார் ராதா.

“அது எப்படிச் சொல்ல முடியும்?” என்கிறேன் நான். சக பத்திரிகையாளர் ஒருவர், “உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்” என்கிறார். வினயத்துடன்.

“என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது? நான் மட்டும் பார்க்கத்தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லே!” என்று ராதா ‘பட்’ டென்று பதிலளிக்கிறார்.