பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

விந்தன்


“அது என்ன, ரவுடிக்காண்ட்ராக்டர், ரவுடிக் காண்ட்ராக்டர் என்று சொல்கிறீர்கள்... ?”

“அந்தக் காலத்துப் பெரிய மனுஷனுங்களிலே பல பேரு அப்படித்தான் இருப்பாங்க. எடுத்ததுக்கெல்லாம் அடியாட்களை விட்டுத் தங்களுக்குப் பிடிக்காதவங்களைப் ‘பிடிடா, கட்டுடா, அடிடா'ம்பாங்க.....”

“அந்த மாதிரி பெரிய மனுஷர்களிலே பரமக்குடி காண்ட்ராக்டரும் ஒருவர் போலிருக்கிறது...”

“ஆமாம், அவருக்கு டிமிக்கி கொடுத்து அங்கே இருக்கிற நடிகர்களையும், நாடகச் சாமான்களையும் சேலத்துக்குக் கொண்டுவரப் பணம் வேணாமா ? அதுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சோம். ‘திருச்சியிலே ஒரு நண்பர் இருக்கார், அங்கே போய் அவரைப் பார்த்தா ஒரு இருநூறு ரூபாயாவது வாங்கலாம்’னு பொன்னுசாமிப் பிள்ளை சொன்னார். அப்படியே போய்ப் பார்த்தோம்; ரூபாயும் கிடைச்சது. ‘நான் இங்கேயே இருக்கேன். நீ மட்டும் பரமக்குடிக்குப் போய் அங்கே இருக்கிறவங்களையெல்லாம் அழைச்சிக்கிட்டு இங்கே வந்துடு. இங்கேயிருந்து எல்லாரும் சேர்ந்தாப்போலச் சேலத்துக்குப் போவோம்’னார் பிள்ளை. ‘சரி'ன்னு பணத்தை வாங்கிக்கிட்டு நான் பரமக்குடிக்குப் போனேன்...”

“அப்போது சிவாஜி கணேசனும் அங்கே இருந்தார், இல்லையா?”

“ஆமாம், இருந்தார். அவருக்கும் மற்ற நடிகர்களுக்கும் என்னைக் கண்டதும் ரொம்ப சந்தோஷம். எதிலே சந்தோஷம்னா ‘எந்த நிலைமையையும் நான் சமாளிப்பேன்’கிறதிலே சந்தோஷம். சினிமாவிலும் சரி, நாடகத்திலும் சரி, அப்பவே எனக்குக் கொஞ்சம் ‘ஸ்டார் வால்யூ’ இருந்தது. அதாலே காண்ட்ராக்டரும் என்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டு, ‘இனிமே நீங்களும் இந்த நாடகக் கம்பெனியிலே சேர்ந்து நடிக்கணும்னு’ சொன்னார்...."