பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

விந்தன்


“ஆமாம், இப்படி ஏமாற்றி விட்டு வருகிறீர்களே, அவர் நீங்கள் இருக்கும் ஊருக்கு உங்களைத் தேடி வந்து...”

“என்ன பிரயோசனம் ? ஊர்ப்பெரிய மனுஷனுங்க ரவுடிசமெல்லாம் அந்தந்த ஊரிலேதானே செல்லும்? மற்ற ஊர்களிலே செல்லாதே!”

“ம், அப்புறம்?”

“சேலம் ஓரியண்டல் தியேட்டரிலே ‘இழந்த காதல்’ நாடகம் போடறதா தீர்மானம் பண்ணோம். எனக்கு அந்த நாடகத்திலே ‘ஜகதீஷ்'னு வில்லன் வேஷம், சிவாஜிக்குச் ‘சரோஜா'ன்னு தாசி வேஷம்... சும்மா சொல்லக்கூடாது, அந்தக் காலத்திலேயே அவர் வேஷத்துக்குத் தகுந்தாப் போல நல்லா மினுக்கி, குலுக்கி, தளுக்கி நடிப்பார்...”

“அவரும் “ராதா அண்ணன் கிட்டே நடிக்கக் கத்துக்கிட்டவங்களிலே நானும் ஒருத்தன்’னு சமீபத்திலே கூடச் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறதே?”

“நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். என்கிட்டே அவருக்கு எப்பவுமே ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு...”

“இருக்காதா... ?”

“எல்லாருக்கும் எங்கே இருக்கு ? அவருக்கு இருக்கு, அவ்வளவு தான்.... அதோடே அதை விட்டுடுவோம்... டிராமாவுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செஞ்சப்புறம் போஸ்டர், நோட்டீசு எல்லாம் போட்டு விளம்பரம் செய்ய வேணாமா ?.... அதுக்குக் கையிலே காசில்லே. ‘என்னடா செய்யறது ?’ ன்னு நானும் பிள்ளையும் கையைப் பிசைஞ்சிக்கிட்டு மாடர்ன் தியேட்டர்ஸ் வாசல்லே நின்னுக்கிட்டிருந்தோம்; என்.எஸ்.கே. வந்தார். இப்போ சில சினிமா நடிகருங்க டெரிலின் சட்டைப் பையிலே ஒரு நூறு ரூபா நோட்டை வெளியே தெரியறாப் போல வைச்சிக்கிட்டுத் திரியறதை நீங்கக்கூடப் பார்த்திருப்பீங்களே.... ?"