பக்கம்:நனவோட்டங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 99 "அவர்கள் இருபது அம்சத்திட்டம்." "அது போதாது. அதனால்தான் மக்கள் ஆட்சியை மாற்றி விட்டார்கள்” என்றார். அவர் கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. அண்ணாவின் படம் மாட்டப்பட்டிருந்தது. அதன் கீழ் கண்ணியம், கடமை, கட்டுப்பாடு என்று அழகாக எழுதியிருந்தார். இதை நாம் பின்பற்றுவது அவசியம் என்று கூறினார். “இவை அண்ணா காட்டிய வழிகள்” என்று பாராட்டிக் கூறினேன். "வழிகள் அதோடு நின்றுவிடக்கூடாது. எங்கே போகிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?" என்றார். அது ஏதோ அண்மையில் வெளிவந்த நாவலின் தலைப்பு என்பது மட்டும் நினைவுக்கு வந்தது. ‘எங்கே போகிறோம்? என்ற கேள்வியை அவரிடமே கேட்டேன். "எங்கே போகவேண்டும் என்பது தான் தெரியும்" என்று கூறினார். "எங்கே போகிறோம் என்பதும் எங்கே போக வேண்டும் என்பதும் தெரிந்து கொள்வது நல்லதுதான்” என்றேன். இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். முதல் கேள்வி சிந்தனையைத் தூண்டுவது; அடுத்த கேள்வி வழி காட்டுவது என்பதை அறிய முடிந்தது. "சமதர்மம்" என்று எழுதி இருந்தார். அதுதான் நாம் போகவேண்டிய இடம் என்று தெரிவித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/101&oldid=772787" இலிருந்து மீள்விக்கப்பட்டது