பக்கம்:நனவோட்டங்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 11 அவள் ஆசை எனக்குத் தெரியும். இந்த உலகத்திலே ஈர்ப்பு சக்தி என்ற ஒன்று இருக்கிறது என்றால் அது இந்த உறவுதான்; அவள் வயிற்றில் நான் ஒரு சுமையாக இருந்தேன். அவள் ஒரு நாளும் என்னைச் சுமையாகக் கருதி இருக்கமாட்டாள். அவள் என்னை வயிற்றில் தாங்கியவுடன் எவ்வளவு சந்தோஷம், அந்த முகப் பொலிவு என்னால் எப்படித் தெரிந்து கொள்ள முடியும். மற்ற தாய்மார்களைக் கண்டு என்னால் யூகித்துப் பார்த்து அறிய முடிகிறது, தாய்மை பெறும் பொழுதுதான் பெண்ணே அழகு பெறுகிறாள். என் தாயும் என்னை வயிற்றில் தாங்கிய போது அழகாகத்தான் இருந்திருப்பாள். அதற்கப்புறம் அந்த ஒரு சந்தோஷத்துக்காகவே வாழ்நாள் எல்லாம் போராடி இருக்கிறாள். நான் ஒருவன் இல்லை என்றால் அவள் இந்த உலகத்தில் வாழ்ந்திருப்பாள் என்று கூற முடியாது. வாழாமல் என்ன செய்ய முடியும். அது ஒரு வாழ்க்கை என்று கூற முடியாது. அவள் நிச்சயமாக அழகாய்த்தான் இருந்திருப்பாள். இளமை அவளுக்குத் தனிக் கவர்ச்சியைத் தந்திருக்கும்; பழி நிறையத் தொடர்ந்திருக்கும். அவள் மானத்தோடு வாழ்ந்தாள். அதை அடிக்கடிச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவாள். அதாவது தன்னைப் போல மற்றவர்களும் நல்ல பெயரோடு வாழ வேண்டும் என்பது அவள் நினைப்பு. நீ ஒருவன் பிறக்க வில்லை என்றால் ஏதோ இப்படிப் பேசி அறுப்பாள். எல்லாமே அப்படித்தான். ஒரு சில தொடர்புகள் ஏற்பட்டு விட்டால் அவையே வாழ்வின் பிடிப்புகளாக அமைந்து விடுகின்றன. மகன் தாய் என்ற உறவு இயற்கை உண்டாக்கித் தரும் பிடிப்பு. அவள் என்னைப் பெறவில்லை என்றால் என்னைப் பொறுத்தவரை நான் என்ற ஒரு சொல்லே எழவேண்டிய அவசியம் இருக்காது. இந்தக் கதைக்கே 'நான்தான் தலைவனாக இயங்குகிறேன். இந்த நான் இதுதான் என் கதை, ஒவ்வொருவரின் கதையும் இதுதான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/13&oldid=772843" இலிருந்து மீள்விக்கப்பட்டது