பக்கம்:நனவோட்டங்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ரா. சீனிவாசன் எப்படி அவள் வாழ்நாள் எல்லாம் இப்படியே காலம் தள்ள முடியும் என்று நினைத்தது உண்டு. சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் நான் ஒரு குற்றவாளி, லட்சியத்தி லிருந்து தவறிவிட்டேன். மற்றவன் மனைவியை விரும்பினேன். காதல் கொண்டேன். என்னை இழந்தேன். என் பார்வையில் பார்க்கும் பொழுது நான் தவறி விட்டதாக நினைக்கவில்லை. அவளை யாரோ ஒருவன் புறக்கணித்ததுதான் காரணம் என்று நினைக்கத் தொடங்கியது என்மனம். ஒவியரைப் பற்றி நினைத்தேன்; அவரால் என்னை வைத்து ஒரு படம் வரையச் சொன்னால் எப்படி வரைய முடியும்? இராமனைப் போன்ற உணர்வை என் உருவத்தில் அவரால் தீட்டிக்காட்ட முடியாது. கடவுள் வடிவங்களை அவரால் எளிதாக எழுத முடியும். மற்றும் சாதாரண மனிதனையும் தீட்டிக்காட்ட முடியும். கடவுளரின் குணங்கள் அவருக்குத் தெரிந்தவை. சாதாரண மனிதனை அவர் அறிந்திருக்கிறார். இராட்சதர்களைக் கோரப்பல் உடையவர்களாகத் தீட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஆற்றல் மிக்கவனைப் பத்துத்தலைகள் உடையவனாகக் காட்டி இருக்கிறார்கள். மற்றும் அடையாளம் காட்டுவதற்காக யானை முகன் ஆறுமுகன் என்று பிரித்துக் காட்டி இருக்கிறார்கள். நீல நிறத்தவன் இராமன் என்று நிறம் தீட்டிக் காட்டி இருக்கிறார்கள். மயிலும் வேலும் முருகனுக்கு அமைத்துத்தந்து இருக்கிறார்கள். நின்ற வண்ணத்தில் நெடுமாலையும், கிடந்த வண்ணத்தில் திருமாலையும் காட்டி இருக்கிறார்கள். ஆடும் கோலத்தில் அம்பலவாணனைக் காட்டி இருக்கிறார்கள். இப்படி எல்லாம் தெய்வங்களைக் காட்ட முடிந்தது. மனிதன் உருவத்தால் ஒத்து இருக்கிறான்; பண்பால் வேறுபட்டு இருக்கிறான், மக்களே போல்வர் கயவர்' என்று தெரிந்துதானே வள்ளுவர் கூறி இருக்கிறார். நல்லவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/140&oldid=772855" இலிருந்து மீள்விக்கப்பட்டது