பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

19

அதாவது அதன் மூலம் தன் சொத்தைத் தூய்மைப் படுத்திக் கொள்வது. இப்படிப் பிறர்க்கு வழங்குவதன் மூலம் 40ல் ஒரு பங்கு வரி கொடுத்து விட்ட பிறகு, இதனால் மற்ற 39 பங்கு தூய்மையாகிறது என்பது பொருள். 4 ஆயிரம் வைத்திருப்பவன் 100 ரூபாய், 40 ஆயிரம் வைத்திருப்பவன் 1 ஆயிரம் கொடுக்க வேண்டும். இது கட்டாய வரி. அது மட்டும் கருத்தில்லை. இந்த ஜக்காத், பணக்காரன் இரும்புப் பெட்டியிலே வைத்திருக்கும் பச்சை நோட்டுகளும், பணமும் ஏழையின் குடிசைக்கும், தகரக் குவளைக்கும் வந்து சேர, ஒழுங்காக வெட்டப்பட்டுள்ள ஒரு கால்வாய் மாதிரியும் தெரிகிறது. உலகம் முழுதும் உள்ள மக்கள் இம்முறையைக் கையாண்டு வருவதானால், பொதுவுடைமை இயக்கமே தேவையில்லை என நான் கருதுகிறேன். நாயகம் அவர்கள் தம்முடைய உள்ளத்தில் இதை எண்ணியே புகுத்தி இருக்கிறார்கள்.

ஹஜ்

கடைகியாக 'ஹஜ்'. 'ஹஜ்'ஜுக்கு நான் போனதில்லை. போக விரும்பியும் முடியவில்லை. ஆனால், நான் சிங்கப்பூரில் இருந்தேன். அங்கே ஒரு சைனா நண்பர். 'ஹஜ்'ஜுக்குப் போய் வந்தவர். அவருக்குத் தமிழ் தெரியாது. எனக்கு சீனம் தெரியாது. இரண்டு பேரும் மலாய் மொழியில் சிறிது உளறிக் கொள்வோம். அவர் சொன்னதை நான் கொஞ்சம் அறிந்து கொண்டு, இங்கு வந்த பிறகு அதை விசாரித்தறிந்து பார்த்தால், மக்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் அங்குச் சென்றாக வேண்டும் எனத் தெரிய வருகிறது. ஆண்டு தோறும் அங்கு இலட்சக் கணக்கான மக்கள் தொழுகைக்காகக் கூடுகிறார்கள்.