பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நபிகள் நாயகம்

தண்ணீர் முழுவதையும் இந்தக் கொட்டாங்கச்சியால் இறைத்துக் கரையில் ஊற்றுகின்ற வேலை" என்றான். ஞானி வியப்புடன் சிரித்து, "தம்பி! நீ எவ்வளவு! கடல் தண்ணீர் எவ்வளவு! உன் கையில் உள்ள கொட்டாங்கச்சி எவ்வளவு! இதைக் கொண்டு அதை எப்படி இறைத்து, ஊற்ற முடியும்" எனக் கேட்டார். சிறுவன் சொன்னான், "ஹஜரத்! நீங்கள் எவ்வளவு! ஆண்டவன் எவ்வளவு!உங்கள் மூளை எவ்வளவு! இதைக் கொண்டு அவன் செயலை அறிய முடியுமானால், இந்தக் கொட்டாங்கச்சியைக் கொண்டு இக்கடல் தண்ணீரை இறைத்து விட முடியாதா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்; நானும் முயற்சிக்கிறேன்" என்று மறுபடியும் ஓடிக் கடல் தண்ணீரை முகக்கத் தொடங்கினான்.

சாலமோன் ஞானிக்கு விடை கிடைத்து விட்டது. கிடைத்த விடை என்ன? மனிதன் தன் மூளையைக் கொண்டு, ஆண்டவனுடைய செயல்களை அளக்க முயற்சிப்பது, கொட்டாங்கச்சியைக் கொண்டு கடல் தண்ணீரை இறைத்து விட முயற்சிப்பது போன்றது என்பதே. ஞானிக்கு ஐயம் மறைந்தது. அதே வினாடியில் சிறுவனும் மறைந்தான்.

படிக்காத ஒருவர் வாயிலிருந்து 'திருக்குரான்' எப்படித் தோன்றியிருக்க முடியுமென்று என்னைக் கேட்பவர்களுக்கு நான் கூறுகிற விடை சாலமோன் ஞானியினுடைய கதைதான்.


7. இஸ்லாத்தின் வளர்ச்சி

கி. பி. 611ல் இஸ்லாம் சமயத்தைச் சீர்திருத்தி, அதன் ஒரே தலைவராகத் தனித்து நின்றவர் நாயகம்