பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

35

வருவார்கள். போகும் போது கொட்டாவிட்டால், வரும் போது கொட்டுவான் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அதற்கும் தயாராக வருவார்கள். ஒரு நாள் பள்ளிவாசலுக்குப் போகும் போதும் குப்பை விழவில்லை. தொழுது திரும்பி வரும் போதும் விழவில்லை. அவர்கள் கால் எட்டிப் போகவில்லை. நடை வரவில்லை. நின்று விட்டார்கள். அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் ஒருவன் எதிர்த்த வீட்டிலிருந்து சொன்னான். "நீங்கள் செல்லுங்கள், ஹஜ்ரத். அவன் விளையாட்டுக்காரப் பையன். அவன் ஏதோ தெரியாமல் செய்து விட்டான்" என்று. அதற்கு நாயகம் அவர்கள், "நாள்தோறும் நான் வரும் போதெல்லாம் இது நடக்குமே? இன்றைக்கு ஏன் நடக்கவில்லை? என்று தெரிந்து கொண்டு போகலாமென்றுதான் கேட்டேன்" என்றார்கள். "இல்லை ஹஜ்ரத்! அவன் பெரிய சுரத்தினாலே அவதிப்படுகிறான். எழுந்திருக்க முடியாது" என்றான். இதைக் கேட்ட நாயகம் அவர்கள் மனங்கலங்கி அவ்வீட்டின் கதவைத் தட்டி, கோஷா எச்சரிக்கை செய்து, உள்ளே நுழைந்தார்கள். அவன் படுக்கையிற் படுத்துக் கொண்டு அலறிக் கொண்டிருந்தான். என்ன நடந்தது? என்ன நடக்கும்? நம் அறிவுக்கு எட்டாதது அங்கு நடந்தது. உடனே சென்று அவனைத் தூக்கி மடிமேல் வைத்துக் கொண்டு, ஆண்டவனிடத்தில் துவா கேட்க ஆரம்பித்தார்கள். "ஓ ஆண்டவனே! நாள் தோறும் நான் வருகின்ற வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த என்னுடைய அரிய நண்பனுக்கா இந்த நோய்?" என்று துவாக் கேட்க ஆரம்பித்தார்கள். துவாக் கேட்கப் பட்டது. நோய் நீங்கியது அவன் ஒரு நல்ல சீடனானான்.