பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

45

12. நாயகம் அவர்களின் போதனை

வாழ்க்கைக்கு

சிக்கனமாய் இரு; ஆனால் கருமியாய் இராதே. இரக்கங் காட்டு; ஆனால், ஏமாந்து போகாதே. அன்பாய் இரு; ஆனால் அடிமையாய் இராதே. வீரனாய் இரு; ஆனால் போக்கிரியாய் இராதே. சுறுசுறுப்பாய் இரு; ஆனால் படபடப்பாய் இராதே என்பவை அவர்களுடைய போதனைகள். இவற்றின் வேற்றுமைகளை உள்ளத்தே எண்ணி, வாழ்க்கை நடத்துவது நல்லது.

பொதுத் தொண்டு

பொதுத்தொண்டு செய்கின்ற ஒவ்வொருவனும், முதலில் தன் வீட்டிலிருந்தே பொதுத் தொண்டைத் தொடங்க வேண்டும் என்பதே நாயகம் அவர்களின் கொள்கை. இதைப் பின் வரும் அவரது போதனை நமக்கு நன்கறிவிக்கிறது. அது "பள்ளிவாசலில் விளக்கேற்றி வைக்கப் புறப்படு முன் உங்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்துப் புறப்படுங்கள்" என்பது. வீட்டை இருளடைந்து போகும்படி செய்கிறவன் பள்ளிவாசலில் விளக்கேற்றி வைக்கத் தகுதியுடையவன் அல்லன் என்பது நாயகம் அவர்களின் கருத்து. இது பொதுத் தொண்டு செய்கிறவர்களைச் சிந்திக்கச் செய்யுமென நம்புகிறேன்.

நட்பு

'அண்டை வீட்டுக்காரர்களோடு எப்பொழுதும் நட்பாய் இருங்கள் ' என்பது அவர்களது போதனைகளிலொன்று. அதற்கு வழியும் கூறியிருக்கிறார்கள். அது, உங்கள் வீட்டில் பலகாரங்கள் பண்ணும் போதெல்லாம், அண்டை வீட்டுக்காரர்களுக்கும் அனுப்பி அவர்களை