பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

53

சுழற்றித் தின்னும். அவ்வளவு ஆசை அதற்கு, அது தின்னும் போது முள் எல்லாம் குத்தும். நாக்கிலிருந்து இரத்தம் வெளி வரும். அதையும் சேர்த்துச் சுழற்றிச் சுழற்றிச் சாப்பிடும். கருவேலஞ் செடியை முன்னே அது தின்னும்போது, முள் குத்தும் என்பது தெரியாது. அது குத்தி, இரத்தம் வந்த பிறகேனும் 'தூ' என்று துப்ப வேண்டாமா? இதுதான் ஒட்டகப் புத்தி என்பது. தவறு செய்கிறது எளிது. அறியாமல் செய்து விடக் கூடும். ஆனால் செய்த தவறைத் தவறு என்று உணர்ந்த பிறகு, வருந்தி அழுது ஆண்டவனிடத்தில் மன்னிப்புக் கேட்ட பிறகு, மீண்டும் அத்தவறைச் செய்வது நல்லதல்ல. அது ஒட்டகத்தின் புத்தி. அப் புத்தி உள்ளவனை ஆண்டவன் மன்னிக்க மாட்டான் என்பது நாயகம் அவர்களின் வாக்கு.


14. கடைசி ஹஜ்

நம் நாயகம் அவர்கள் ஒருமுறை ஹஜ்ஜை நிறைவேற்றிய பொழுது, மக்கா நகரை நோக்கியோ அல்லது அந்த அரேபியா நாட்டை நோக்கியோ ஆசியாவை நோக்கியோ சொல்லாமல், உலக மக்களை நோக்கி, மூன்று சொற்றொடர்களைச் சொன்னார்கள். நாயகம் அவர்களுடைய பிறந்த நாள் விழாவிலே அதை நினைக்காமல் விழாவை முடிக்கக் கூடாது. முதற் கட்டளை, அன்னியனுடைய உடைமைக்கு ஆசைப் படாதே என்பது. இதைச் சாட்டையடி மாதிரி கொடுத்தார்கள். அன்னியனுடைய உடைமை என்று சொல்லும் பொழுது, அது மண்ணையும் குறிக்கிறது. பொன்னையும் குறிக்கிறது. பெண்ணையும் குறிக்கிறது.