பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86



65. தியாக உள்ளம்

பெருமானார் அவர்களின் நெருங்கிய தோழர்கள் எவ்வளவு சிரமமான நிலையில் இருந்த போதிலும், தியாக உள்ளமும், தாராளத் தன்மையும் உடையவர்களாகவே விளங்கினார்கள்.

ஒரு சமயம், பெருமானார் அவர்களிடம் ஒருவர் வந்தார். அப்பொழுது பெருமானார் அவர்களின் இல்லத்தில் உணவு ஏதும் இல்லை. தோழர்களை அழைத்து, அவர்களில் யாராவது வந்திருப்பவரைக் கூட்டிக் கொண்டு போய் உணவு அளிக்கும்படி கூறினார்கள்.

உடனே, அபூ தல்ஹா என்பவர், வந்தவரைத் தம் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், தம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமே இருந்த உணவை, வந்த விருந்தினருக்கு அளித்து உண்ணச் செய்தார்.

பெருமானார் அவர்களின் காலத்தில், சகோதரத்துவ உணர்வு எவ்வளவு வலிமையுடையதாக இருந்தது என்பதற்கு அது ஓர் உதாரணமாகும்.


66. பெருமானார் அவர்களின் எளிய வாழ்க்கை

மதீனாவில் பள்ளி வாசலை ஒட்டி அமைந்திருந்த இரண்டு அறைகளில், பெருமானார் அவர்கள் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார்கள். அறைகளோ மிகவும் சிறியன. இரவு நேரங்களில், அந்த அறைகளில் விளக்குக் கூட இருக்காது.

பெருமானார் அவர்களின் இல்லற வாழ்க்கை மிகவும் எளிமையாகவே இருந்தது. நாள் கணக்கில் அடுப்பு எரியாமலேயே இருக்கும். பெருமானார் அவர்கள் பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு, தண்ணீரைப் பருகி, திருப்தி அடைவார்கள். ரொட்டி சுடுவதற்கு மாவு கிடைக்கவில்லையானால், வெறும் மாமிசத்தை மட்டுமே சமைத்து உண்டு விடுவார்கள். சில வேளைகளில், பெருமானார் அவர்கள் ஒட்டகப் பாலையும் அருந்துவார்கள்.