பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109



84. கடுமையான போர்

பத்ருப் போரில் மாண்டவர்களுக்குப் பழி வாங்க வேண்டும் என்பதாகக் குறைஷிப் பெண்கள் பாடல்கள் பாடிக் கொண்டும், முரசு ஒலித்துக் கொண்டும் யுத்த களத்தில் இறங்கினார்கள்.

****

அபூ ஆமீர் என்பவர் மதீனாவாசி; மக்களின் மதிப்பைப் பெற்றவர். பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்ததும், அவர் மதீனாவை விட்டு மக்காவுக்குப் போய் வசிக்கலானார். அவர் இப்பொழுது இருநூறு குறைஷி வீரர்களுடன் போர்க் களத்தில் முன்னே வந்தார்.

தாம் முன்னேறி வந்தால் மக்கள், பெருமானார் அவர்களைக் கை விட்டு, தம்முடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற சபலம் அவருக்கு இருந்தது. அந்த நோக்கத்தோடு அன்ஸாரி முஸ்லிம்களைப் பார்த்து, “நீங்கள் என்னை அறிவீர்களா? நான்தான் அபூ ஆமீர்!” என்று கூறினார்.

அன்ஸாரிகள், “ஆம், துரோகியே! உம்மை நாங்கள் நன்றாக அறிவோம். உம்முடைய விருப்பம் நிறைவேறாமல் இருக்கட்டும்!” என்று பதிலடி கொடுத்தார்கள்.

****

குறைஷிகளின் கொடியைப் பிடித்துக் கொண்டிருந்த தல்ஹா என்பவர் அணியை விட்டு வெளியேறி, முஸ்லிம்களைப் பார்த்து, “இறந்த உங்கள் வீரர்கள் சுவர்க்கத்திலும், எங்கள் வீரர்கள் நரகத்திலும் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் பொய்யர்களே. உண்மையில் இக்கூற்றை உங்களில் நம்புபவர் யாரேனும் இருந்தாலும் வாருங்கள் என்னோடு போருக்கு!” என்று சவால் விட்டார்.

அடுத்த கணம் ஹலரத் அலீ அவர்கள், “நான் அவ்வாறு செய்வேன்!” என்று கூறி, உடனே வாளால் வீசினார்கள். தல்ஹா மாண்டு வீழ்ந்தார்.