பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111



ஹம்ஸா அவர்கள் இரு கைகளிலும் வாளேந்தி, அணி அணியாக வெட்டிச் சாய்த்துக் கொண்டே சென்றார்கள். அப்போது குறைஷிகளின் அடிமை வஹ்ஷி என்னும் அபிசீனிய தேசத்தவர், அவர்கள் மீது கண் வைத்துக் கொண்டிருந்தார். ஹம்ஸாவை வெட்டி வீழ்த்தி விட்டால், அவருக்கு விடுதலை அளிப்பதாக, அவருடைய எஜமானர் வாக்களித்திருந்தார்.

ஹல்ரத் ஹம்ஸா நெருங்கி வரும்போது, அவர்கள் மீது சிறிய ஈட்டி ஒன்றை வீசினார் வஹ்ஷி; அதன் தாக்குதலால் ஹம்ஸா (ரலி) அவர்கள் கால்கள் தடுமாறி விழுந்து, உயிர் நீத்தார்கள்.

கொடி பிடித்துக் கொண்டிருந்த குறைஷிகளில் பலர் கொல்லப்பட்டனர். ஆனாலும், ஒருவர் பின் ஒருவராகத் தங்கள் கொடி கீழே விழாமல் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அலீ அவர்கள், அபூதுஜானா ஆகிய இருவரின் இடை விடாத தாக்குதலினால் குறைஷிகளின் பல அணிகள் அழிந்து போயின. குறைஷிப் படையினரின் ஊக்கம் குன்றியது; அவர்கள் தலைவர்களுடைய மனமும் தளர்ந்து விட்டது. பாடல்கள் இசைத்து உற்சாகமூட்டிக் கொண்டிருந்த மாதர்கள் நம்பிக்கை இழந்து பின்னடைந்தார்கள்.

எதிரிகள் பின் வாங்குவதை அறிந்ததும் அவர்களுடைய பொருள்களைக் கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் படை தங்கள் இடத்தை விட்டு முன்னேறிச் சென்றது. அதைப் பார்த்து, கணவாய்ப் பாதையைப் பாதுகாவல் செய்து கொண்டிருந்த அம்பு எய்வோரும், தங்கள் இடத்தை விட்டுப் பெயர்ந்து, செல்லத் தொடங்கினார்கள். அவர்களின் தலைவர் அப்துல்லாஹ்-இப்னு-ஜூபைர்,[1] பெருமானார் அவர்களுடைய கட்டளைப்படி, அவர்களை எவ்வளவோ தடுத்தார்; ஆனால் அவர்களோ நிற்கவில்லை. அதனால் கணவாய்ப் பாதையானது பாதுகாப்பற்றதாயிற்று.


  1. ஹலரத் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அல்ல இங்கு குறிப்பிடப்படுபவர்கள். அஸ்மா நாச்சியாருக்கும், ஹலரத் ஸுபைருக்கும் மகனாராகிய அப்துல்லாஹ் இப்னு ஸூபைருக்கு, உஹதுப் போரின்போது மூன்று வயதுதான். மேலே சொல்லப்பட்டுள்ள இப்னு ஜுபைர் பனூ தஃலபா கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்; இப்போரில் ஷஹீதானார்கள்.