பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114


 பெருமானார் அவர்கள் கவசம் அணிந்திருந்ததினால், அவர்களுடைய கூர்மையான கண்கள் மட்டுமே தெரிந்தன. அதைக் கண்ட கஃபுப்னு மாலிக் என்பவர், “ முஸ்லிம்களே! நாயகம் இங்கே இருக்கின்றார்கள்” என்று குரல் எழுப்பினார். அதைக் கேட்டதும், முஸ்லிம் வீரர்கள் எல்லோரும் அந்தப் பக்கமாக விரைந்து சென்றனர். அவர்கள் போவதைக் கண்ட குறைஷிகளும் தங்கள் படைகளை அந்தப் பக்கமாகத் திருப்பினார்கள். இதைக் கண்ணுற்ற நாயகம் அவர்கள், “இறைவா! இவர்கள் எங்களுக்கு மேலே போய் விடக்கூடாதே” என்று பிரார்த்தித்தார்கள். இதனால் ஹலரத் உமரும், இன்னும் சில “முஹாஜிர்” தோழர்களும், குறைஷியரை எதிர்த்துத் தாக்கிக் குன்றின் கீழே பின் வாங்கச் செய்தார்கள்.

87. உயிர்த் தியாகம்

சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,ஒரு சமயம் குறைஷிகளின் படை, பெருமானாரின் பக்கமாகத் தாக்கத் தொடங்கியது. தாக்குதல் பலமாக இருந்தது.

அப்பொழுது பெருமானார் அவர்கள், “எனக்காக உயிர் கொடுப்பவர்கள் யார்?” என்று கேட்டார்கள்.

ஸியாத் இப்னு ஸகன் என்பவர், ஐந்து அன்ஸாரிகளுடன் பெருமானார் அவர்கள் எதிரே வந்து, “அந்தச் சேவையை நான் ஏற்கிறேன்” என்றார்.

அவரும், அவருடன் வந்த தோழர்களும், பெருமானார் அவர்களைப் பாதுகாப்பதற்காக வீரமாகச் சண்டையிட்டனர். ஒருவர் பின் ஒருவராக அவர்கள் உயிர் துறந்தனர். அந்நேரம் முஸ்லிம் படைவீரர்கள் திரும்பி வந்தனர். பகைவர்களைப் பின் வாங்கச் செய்தனர்.

ஸியாதியின் உடலை, அருகில் கொண்டு வருமாறு பெருமானார் அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்பொழுது அவர் குற்றுயிராக இருந்தார். ஸியாதின் தலையை, நீட்டிய தங்கள் கால் மீது தாங்குதலாக வைத்துக்கொண்டார்கள் அந்த நிலையிலேயே ஹலரத் ஸியாதின் உயிர் பிரிந்தது.