பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118



அவ்வாறு வந்தவர்களில் ஹன்லல்லா இப்னு அபூ ஆமிர் என்பவரும் ஒருவர்.[1] அவருக்கு அன்றுதான் திருமணமாகி இருந்தது. செய்தி கிடைத்ததும் மிகுந்த ஆத்திரத்தோடு, போர்க்களத்துக்கு ஓடி வந்தார். வந்ததும் குறைஷிகளின் அணிகளில் புகுந்து, அவர்களை வெட்டி வீழ்த்தியவாறு முன்னேறி, அபூஸூப்யானையும் நெருங்கி விட்டார். ஆனால், எதிரிகள் பல பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு அவர் உயிர் துறக்கும்படியான பலத்த காயங்களை உண்டாக்காமல் இருந்திருந்தால், அபூஸூப்யானையும் அவர் கொன்றிருப்பார்.

பெருமானார் அவர்களின் மகளார் பாத்திமா நாச்சியார் வந்து பெருமானார் அவர்களைக் காணும் போது, அவர்களுடைய முகத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. முகத்தில் அழுந்தி இருந்த கவசத் துண்டுகளை அபூ உபைதா என்பவர் தம்முடைய பற்களால் கடித்து இழுக்கவே, அத்துண்டுகள் வெளியே வந்தன. அதனால் அபூ உபைதாவின் இரண்டு பற்கள் உடைந்து விழுந்தன.

அலீ அவர்கள் கேடயத்தில் தண்ணீர் கொண்டு வந்தார்கள்.

பாத்திமா நாச்சியார் அந்தத் தண்ணீரால் கழுவியும் கூடப் பெருமானார் அவர்களின் முகத்திலிருந்து இரத்தம் பீறிட்டு வருவது நிற்கவில்லை.


91. ஆண்டவனின் பகைவனே!

சண்டை நடந்து கொண்டிருக்கும் போது அபூ ஸூப்யான் எதிரிலுள்ள குன்றின் மீதேறி, “இங்கே முஹம்மது இருக்கின்றாரா?” என்று கேட்டார்.

அதற்கு மறுமொழி கூற வேண்டாம் எனப் பெருமானார் கட்டளை இட்டிருந்ததால், யாருமே பதில் அளிக்காமல் இருந்தனர்.


  1. 84ம் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அபூ ஆமிர் என்பவரின் மகனார், தந்தை எதிரிப்படையிலும், மகன் பெருமானாரின் அணியிலுமாக இருந்தனர்.