121
அன்னையாரைத் தடுத்து நிறுத்துமாறு சொன்னார்கள். அவர் அன்னையாருக்குத் தெரிவித்தனர்.
ஆனால், “என் சகோதரருக்கு நிகழ்ந்தது முழுவதும் நான் கேள்விப்பட்டேன். ஆண்டவனுடைய வழியில் இது பெரிதல்ல. அமைதியோடு இருக்க ஆண்டவன் அருள் செய்திருக்கிறான். இன்ஷா அல்லாஹ் அதைப் பார்த்துப் பொறுமையோடு இருப்பேன்” என்று ஸபிய்யா நாச்சியார் சொன்னார்கள். ஸுபைர் அவர்கள் நாயகத்திடம் இதைத் தெரிவித்ததும், “சரி போகட்டும் விட்டு விடுங்கள்” என்று பெருமானார் கூறி விட்டார்கள்.
தம்முடைய அருமைச் சகோதரரின் உடல் சின்னாபின்னப்பட்டுக் கிடப்பதைக் கண்டார். அவருடைய இரத்தம் கொதித்தது. இத்தகைய துக்ககரமான நிலைமையில் அந்த அம்மையார், “நிச்சயமாக நாம் அனைவரும் அல்லாஹ்விடமிருந்தே வருகிறோம்; நிச்சயமாக அவனிடமே திரும்புவோம்” என்ற வேத வசனத்தைக் கூறிப் பின்னர், தம்முடைய சகோதரருக்காகப் பிரார்த்தனை செய்தார். அவருடைய உடலைப் போர்த்தி அடக்கம் செய்வதற்காக இரண்டு துணிகளைக் கொடுத்து விட்டுத் திரும்பி விட்டார்.
முஸ்லிம்களில் ஆண்களும், பெண்களும், பெருமானார் அவர்களிடத்தில், எத்தகைய அன்பும் விசுவாசமும் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்று நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன.
பகைவர்களின் தாக்குதல் பலமாயிருக்கும் போது, முஸ்லிம் வீரர்களில் சிலர் போர்முனையை விட்டு மதீனாவுக்கு ஓடி விட்டனர்.
அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றதும், அவர்களுடைய மனைவியர்களுக்கு நிகழ்ந்தவை தெரிந்ததும், “நாயகத்தைப் போர்க் களத்தில் விட்டு விட்டு, நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?” என்று இடித்துக் கூறினர்.
சண்டையின் நிலைமை மதீனாவுக்குத் தெரிந்ததும், எத்தனையோ பெண்கள் பெருமானார் அவர்களைக் காண்பதற்காகப் போர் முனைக்கு விரைந்தனர்.