பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127



மிகுந்த வருத்தம் அடைந்ததோடு, கொல்லப்பட்ட இருவருடைய குடும்பத்தாருக்கும் நஷ்ட ஈட்டுத் தொகை அளித்தார்கள்.


98. உயிர் இழந்த உத்தமர்கள்

மற்ற இரு கூட்டத்தினர் முன் போலவே, பெருமானார் அவர்களிடம் வந்து தங்கள் கூட்டத்தார் இஸ்லாத்தைத் தழுவி இருப்பதாகவும், அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான விஷயங்களைப் போதிப்பதற்காகச் சிலரை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களின் வேண்டுகோளின்படி, ஆஸிம் இப்னு தாபித் உட்பட ஆறு பேரை பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் அர்ரஜீஃ என்னும் இடம் போய்ச் சேர்ந்ததும், அவர்களை அழைத்துக் கொண்டு சென்றவர்கள், பக்கத்திலுள்ள வேறு ஒரு கூட்டத்தாரைத் தூண்டிவிட்டு, முஸ்லிம்களைத் தாக்கிக் கொல்லும்படிச் செய்தார்கள். அவர்கள் இருநூறு பேர் ஆயுதங்களுடன் தாக்குவதற்கு வந்தனர். முஸ்லிம்கள் அறுவரும், அருகிலிருந்த ஒரு குன்றின் மீது ஏறிக் கொண்டார்கள்.

“நீங்கள் கீழே இறங்கி வந்தால், உங்களை நாங்கள் பாதுகாப்போம்” என்றார்கள் அந்தக் கூட்டத்தாரில் அம்பு எய்வோர்.

முஸ்லிம்களின் தலைவர் ஆஸிம் அதற்கு, “விசுவாசமற்றவர்கள் ஆதரவில் வர மாட்டோம்” என்று பதில் அளித்துக் கீழே இறங்கி, சண்டை செய்து வீர மரணம் அடைந்தனர்.

குன்றின் மீது மீதி இருவர் மட்டும் இருந்தனர். அவர்கள் பகைவர் பேச்சை நம்பி கீழே இறங்கி வந்தனர். அவர்களைச் சிறைப்படுத்தி மக்காவுக்குக் கொண்டு போய் அடிமைகளாக விற்றுவிட்டனர். அந்த இருவரில் ஒருவர் குபைப், மற்றொருவர் ஸைத்.

மேற்படி இருவரும்,பத்ருப் போரின் போது மக்காவாசியான ஹாரித் இப்னு ஆமீரைக் கொன்றதற்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு, ஹாரிதின் மக்கள் அவர்களை விலைக்கு வாங்கி, கொஞ்ச நாள் வைத்திருந்து, பிறகு கஃபாவின் எல்லையைக் கடந்து வெளியே கொண்டு போய் வதைத்துக் கொன்று விட்டனர்.