பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138



போரில் சிறைப் பிடித்தவர்களை எல்லாம் படைகளிடம் பிரித்துக் கொடுக்கப் பட்டனர்.

“எந்தக் குடும்பத்தில் பெருமானார் அவர்கள் திருமணம் செய்துள்ளார்களோ, அந்தக் குடும்பத்தார் அடிமைகளாக இருக்கக்கூடாது” என்று கூறி, முஸ்லிம் படைகள் தாங்களாகவே அவர்களை விடுவித்து விட்டார்கள்.

சில நாட்களில் ஹாரிதும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

இப்போர் முடிந்து திரும்பி வரும் பொழுதுதான் முனாபிக்குகள், ஆயிஷாப் பிராட்டியார் அவர்களின் மீது பெரும் பழி ஒன்றைச் சுமத்தினார்கள். அந்த வஞ்சகர்களின் தீய வலையில், முஸ்லிம்களில் நால்வர் சிக்கி, அதை உண்மை என நம்பி விட்டார்கள். ஆனால், பின்னர் விசாரணையில் அது நயவஞ்சகர்களின் கட்டுப்பாடான பொய் என்று வெளியாயிற்று.

அதே சமயத்தில், ஆயிஷாப் பிராட்டியார் அவர்களின் சீலத்தைப் பற்றி பெருமானார் அவர்களுக்கு ஆண்டவன் சமூகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.


105. கூட்டு முயற்சியில் தாக்க வருதல்

பனூ நலீர் கூட்டத்தார் கைபரில் குடியேறி, நிலைத்த பின் அவர்கள் முஸ்லிம்களுக்கு விரோமாக சூழ்ச்சிகள் செய்யத் தொடங்கினார்கள்.

அவர்களுடைய தலைவர்கள், மக்கா குறைஷிகளிடம் சென்று, “தங்களுக்கு உதவி புரிய வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதாயிருந்தால் இஸ்லாத்தை வேரோடு பெயர்த்து விடலாம்” என்றும் சொன்னார்கள்.

இத்தகைய ஒத்துழைப்புக்காகக் காத்துக் கொண்டிருந்த குறைஷிகள், அவர்கள் கூறிய ஆலோசனையை மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர்.