பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139



மதீனாவைத் தாக்குவதற்காகக் குறைஷிகள் தயாரானதோடு, சுற்றுப்புறங்களில் உள்ளவர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

யூதர்களும் தங்களுடன் நட்பாயிருந்த ஒவ்வொரு கூட்டத்தாரையும் சேர்த்துக் கொண்டார்கள்.

குறைஷிகள், யூதர்களின் படை பலம் மொத்தம் இருபத்து நான்காயிரம் வரை சேர்ந்தது. அந்தப் படைக்கு அபூ ஸூப்யான் தலைவராக ஆனார்.

குறைஷிகள் இருபத்து நான்காயிரம் வீரர்களுடன் மதீனாவைத் தாக்க வரும் செய்தி, பெருமானார் அவர்களுக்குத் தெரிந்தது. உடனே, தோழர்களைக் கூட்டி, ஆலோசனை செய்தார்கள்.

தோழர்களில் ஸல்மான் பார்ஸி என்ற பார்ஸி தேசத்தார் போர் முறைமையில் திறமையானவராக இருந்தார்கள். குறைஷிகள் ஏராளமான படையுடன் வருவதால் அவர்களோடு, எண்ணிக்கையில் மிகக் குறைவாயுள்ள முஸ்லிம் படை, சம தளத்தில் எதிரே நின்று சண்டை செய்வது சரியல்ல என்றும், முஸ்லிம் படையை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேகரித்து வைத்து, அதைச் சுற்றிலும் அகழ் தோண்டிக் கொள்ள வேண்டும் என்றும் ஸல்மான் பார்ஸி அவர்கள் ஆலோசனை கூறினார்கள், அதை அனைவரும் ஏற்றனர்.

அகழ் தோண்டுவதற்கு ஏற்பாடாயிற்று.

மதீனா நகரைச் சுற்றி மூன்று புறங்களில் கட்டடங்களும், சிறு குன்றுகளும், தோட்டங்களும் அமைந்திருந்தன. அம்மூன்று பக்கங்களுக்கும் அவை பாதுகாப்பாக இருந்தன. எனவே திறந்திருந்த ஒரு பகுதியில் அகழ்கள் தோண்டுவதற்குப் பெருமானார் அவர்கள் மூவாயிரம் தோழர்களுடன் சென்றார்கள். அகழின் அளவைப் பெருமானார் அடையாளம் போட்டுக் கொடுத்தார்கள். முப்பதடி சதுரமும், பதினைந்து அடி ஆழமுமான அளவுள்ள அகழைப் பத்துப் பேர் சேர்ந்து, தோண்ட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். மற்றவர்களுக்குக் கட்டளையிட்டதோடு நிற்கவில்லை. மற்றவர்களால் தோண்டி எடுக்கப்படும் மண்ணைப் பெருமானார்