பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158


சிறிய சண்டையில் அக்கூட்டத் தலைவர் துமாமா என்பவர் முஸ்லிம்களிடம் சிறைப்பட்டார்.

பெருமானார் அவர்களின் முன்னிலையில், துமாமாவைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். “உம்மை எவ்வாறு நடத்த வேண்டும்?" என்று அவரிடம் கேட்கப்பட்ட போது அவர்:

“நீங்கள் என்னைக் கொன்று விடுவதால், முஸ்லிம்களைக் கொலை செய்த ஒருவனைக் கொன்றதாகும். ஆனால், என் மீது இரக்கம் காட்டினால் அதற்காக நன்றியறிதல் உள்ள ஒருவன் மீது கருணை காட்டியதாகும்” என்றார்.

பெருமானார் அவர்கள், உடனே அவரை விடுவிக்கும்படி உத்தரவிட்டார்கள்.

உடனே துமாமா அருகில் இருந்த ஊற்றில் குளித்து விட்டுப் பெருமானார் அவர்களிடம் வந்து,

“ஆண்டவன் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். நேற்று வரை நான் உங்களை வெறுத்ததைப் போல் இவ்வுலகில் வேறு எவரையும் வெறுத்ததில்லை. ஆனால் இன்றோ உங்களுடைய முகத்தைப் போல் அவ்வளவு ஒளி மிகுந்ததாக வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. மற்றும், உங்களுடைய மார்க்கத்தை வெறுத்ததைப் போல் வேறு எதையும் வெறுக்கவில்லை. ஆனால் இன்றோ எனக்கு அதை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை” என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினார்.

அதன் பின்னர், துமாமா மதீனாவிலிருந்து நேராக மக்காவிற்குப் பயணமானார்.

குறைஷிகள் அவரைக் கண்டதும், “நீர் என்ன மதம் தவறியவர் ஆகிவிட்டீரே?” என்று கேட்டனர்.

ஆதற்கு அவர், “நான் மதத்தில் தவறவில்லை; ஆண்டவனுடைய தூதரின் மார்க்கத்தைத் தழுவி இருக்கிறேன்” என்று பதில் அளித்தார்.