பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159



துமாமா வாழ்ந்து வந்த யமாமா மாகாணத்திலிருந்தே மக்காவுக்குக் கோதுமை போய்க் கொண்டிருந்தது.

அவர் முஸ்லிமானதும், பெருமானார் அவர்களுடைய உத்தரவு இல்லாமல், இஸ்லாத்தின் விரோதிகளான மக்காக் குறைஷிகளுக்குக் கோதுமை அனுப்ப இயலாது என்று கூறி, அதை நிறுத்தி விட்டார். அதனால், குறைஷிகள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளானார்கள். தங்களுக்குக் கோதுமை அனுப்புமாறு துமாமாவுக்குக் கட்டளையிட வேண்டும் என பெருமானார் அவர்களை மிகவும் வேண்டிக் கொண்டனர்.

கடுமையான பகைவர்களின் வேண்டுகோளை, கருணை மிக்க பெருமானார் அவர்கள் மறுக்காமல், துமாமாவுக்குச் சொல்லி அனுப்பினார்கள். வழக்கம்போல் அவர்களுக்குக் கோதுமை கிடைத்தது.

குறைஷிகளுக்கு எவ்வளவு தயை காட்டினாலும், அவர்களோ பகைமையைக் கை விடுவதாக இல்லை.


119. உண்மையும் நாணயமும் உள்ளவர்

பெருமானார் அவர்களின் மருமகன் அபுல் ஆஸ் அப்பொழுதும் முஸ்லிமாகாமல் இருந்தார்.

பத்ருப் போரின் போது சிறைப்படுத்தப்பட்ட குறைஷிகளில் அபுல் ஆஸூம் ஒருவர். அவருடைய மனைவியும் பெருமானார் அவர்களின் மகளுமான ஸைனபை மதீனாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அபுல் ஆஸ் விடுதலை செய்யப்பட்டார்.

அகழ்ச் சண்டை நடைபெற்ற சிறிது காலத்துக்குப் பின்னர், அபுல் ஆஸ் வியாபாரத்துக்காக ஷாம் தேசத்துக்குச் சென்று, அங்கிருந்து அதிகமான பொருள்களுடன் திரும்பி வந்தார்.

அப்பொழுது முஸ்லிம்களில் சிலர், அபுல் ஆஸ் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களையும் சூழ்ந்து, சரக்குகளைக் கைப்பற்றி, தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.