பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166


மிகவும் பணிவோடு மெளனமாகக் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர் ஒலுச் செய்யும் போது சிந்தும், தண்ணீரைக் கூடச் சேர்த்து வைக்கின்றார்கள்!” என்றுரைத்தார் உர்வத்.


124. தூதர்களைச் சிறைப்படுத்துதல்

பெருமானார் அவர்கள், முஸ்லிம்களில் ஒருவரை ஒட்டகத்தில் அனுப்பி, குறைஷிகளிடம் போய் மீண்டும் பேசுமாறு அனுப்பினார்கள்.

குறைஷிகள் அந்த ஒட்டகத்தை வெட்டியதோடு, பேச வந்த முஸ்லிமையும் கொல்ல முயன்றனர். ஆனால், அவர்களில் சிலர் அதைத் தடுத்து விட்டனர்.

அதன் பின், முஸ்லிம்களைத் தாக்குமாறு பெருமானார் இருக்கும் இடத்துக்குக் குறைஷிகள் ஒரு கூட்டத்தை அனுப்பினார்கள்.

ஆனால், முஸ்லிம்கள், அந்தக் கூட்டத்தாரைச் சிறைப்படுத்தி விட்டனர். அந்தச் செய்தி பெருமானார் அவர்களுக்குத் தெரிந்ததும், அவர்களை விடுவித்து விடுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர், உமர் அவர்களை, குறைஷிகளிடம் போய், சமாதானம் பேசுமாறு, பெருமானார் கூறினார்கள்.

“குறைஷிகள் எனக்குக் கடுமையான விரோதிகள். எங்களின் சொந்த பனூ கோத்திரத்தில் இப்போது எவரும் இல்லை; எனவே, குறைஷியரின் கொடுமைக்கு நான் இரையாகிவிடுவேன்! எனவே வேறெவரையும் அனுப்புவது பயனளிக்கும்” என்று உமர் (ரலி) கூறவே, உதுமான் அவர்களையும் அவர்களுடைய உறவினர் ஒருவரையும் குறைஷிகளிடம் அனுப்பினார்கள்.

அவ்விருவரும் குறைஷிகளிடம் சென்று, பெருமானார் கூறியவற்றைத் தெரிவித்ததும், குறைஷிகள்:

“நீங்கள் வேண்டுமென்றால் கஃபாவை “தவாபு” செய்துவிட்டுப் போகலாம். முஹம்மதை இந்த ஆண்டு கஃபாவுக்குள் விடுவதில்லை என்று நாங்கள் பிரமாணம் செய்திருக்கிறோம்” என்று கூறினர்.