பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173



வரை வருந்திக் கொண்டே இருந்தார்கள். அக்குற்றத்துக்குப் பரிகாரமாக, தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும், சிறப்பான தர்மங்களைச் செய்வதிலும் அடிமைகளை விடுதலை செய்வதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர்.

இதர முஸ்லிம்களுக்கும், அபூஜந்தலின் நிலைமையைக் கண்டு மிகுந்த கவலை உண்டாயிற்று. ஆனால், பெருமானார் அவர்களின் கட்டளையானதால், ஒன்றும் பேச இயலவில்லை.

பெருமானார் அவர்கள் அதன் பின் குர்பானியும் அதைச் சேர்ந்த சடங்குகளையும் அங்கே நிறைவேற்றினார்கள்.

உடன்படிக்கை நிறைவேறியதும், மூன்று நாட்கள் ஹூதைபிய்யாவிலேயே பெருமானார் அவர்கள் இருந்தார்கள். அதன் பின் அவர்கள் மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

வழியிலேயே, இறைவாக்கு அருளப் பெற்றது.

“(நபியே) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெள்ளி அளித்துள்ளோம்.....”

பெருமானார் அவர்கள், உமர் அவர்களை அழைத்து, அச்செய்தியைத் தெரிவித்தார்கள்,

அதைக் கேட்டதும் உமர் அவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.


130. பெருமானார் அவர்களின் பெருமை

பெருமானார் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், மக்காவுக்குப் போகும் போது பதினாயிரம் முஸ்லிம்களும் சென்றார்கள். முன்னர், போகும் போது ஆயிரத்தி நானூறு பேர்களே சென்றார்கள். குறுகிய காலத்தில் இவ்வளவு தொகையினர் இஸ்லாத்தில் எவ்வாறு சேர்ந்தனர்?

முஸ்லிம்களுக்கும், காபிர்களுக்கும் மத்தியில் ஓயாமல் சண்டைசச்சரவு நிகழ்ந்து வந்ததால், ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக வாய்ப்பு இல்லாமல் இருந்தது.