பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183



அப்பொழுதே, பெருமானார் அவர்கள் ஆண்டவனுடைய உண்மையான திருத்தூதர் என்பதை அவர் நன்கு உணர்ந்து, இஸ்லாத்தைத் தழுவினார். அவரோடு ஏமன் பகுதியிலிருந்தவர்களும் இஸ்லாத்தில் சேர்ந்தனர்.


137. பாராட்டும் பரிசுகளும்

இப்பொழுது எகிப்து தேசமாக விளங்குவது முன்னர் மிஸ்று என்னும் நாடாக இருந்தது. அதை முகெளகிஸ் என்ற கிறிஸ்துவ மதத் தலைவர் ஆட்சி புரிந்து வந்தார்.

பெருமானார் அவர்கள் மற்ற அரசர்களுக்குக் கடிதம் எழுதி, இஸ்லாத்தைத் தழுவுமாறு அழைப்பு விடுத்ததைப் போலவே, அந்தக் கிறிஸ்துவ மதத் தலைவருக்கும், தூதர் முலம் கடிதம் அனுப்பினார்கள்.

பெருமானார் அவர்களின் தூதரை அவர் அன்புடன் வரவேற்று உபசரித்தார். கடிதத்தைப் படித்துக் கருத்தைத் தெரிந்து கொண்டார்.

“நபி ஒருவர் தோன்றுவார்கள் என்பதை நான் முன்னரே அறிவேன். ஆனால், அவர்கள் ஷாம் தேசத்தில்தான் தோன்றுவார்கள் என எண்ணி இருந்தேன். தங்களுடைய தூதரைக் கெளரவப்படுத்தி, சில பரிசுகளையும் தங்களுக்கு வழங்கியுள்ளேன். சிறந்த சில உடைகள், மிஸ்று நாட்டுப் பெண்கள் இருவர் உயர்தரமான ஒரு கோவேறு கழுதை ஆகியவற்றை அனுப்பியுள்ளேன்” எனப் பதில் எழுதி, தூதரிடம் மேற்கண்டவற்றைப் பெருமானார் அவர்களுக்கு அனுப்பி வைத்தார் அவர்.

தலைவரின் பரிசுகளையும், கடிதத்தையும் பெருமானார் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்கள்.

வந்த இரண்டு பெண்களில் ஒருவரான மரிய்யத்துல் கிப்தி நாச்சியாரைப் பெருமானார் திருமணம் செய்து கொண்டார்கள். ஸிரின் என்ற மற்றொரு பெண்ணைக் கவிஞர் ஹஸ்ஸானுப்னு தாபித் திருமணம் செய்து கொண்டார். கோவேறு கழுதையைப் பெருமானார் அவர்கள் துல் துல் எனப் பெயரிட்டு சவாரிக்குப் பயன்படுத்திச் கொண்டார்கள்.