பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196



பெருமானார் அவர்கள் தோழர்களுடன், கைபரிவிருந்து வாதியுல்குரா என்னும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றார்கள். ஆனால் சண்டை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் அங்கே செல்லவில்லை

அங்கே யூதர்கள் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏற்கனவே தயாராக இருந்ததால், முஸ்லிம்களை நோக்கி அம்புகளை எய்ய ஆரம்பித்தார்கள். அதிலிருந்து சண்டை தொடங்கியது. சிறிது நேரத்தில் யூதர்கள் பணிந்து விட்டனர்.

கைபர் யூதர்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின் நிபந்தனைகளை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.


147. மக்காவில் கண் கொள்ளாக் காட்சி

ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டு ஒரு வருடம் ஆகி இருந்தது. அதன்படி, இவ்வருடம், ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்றப் பெருமானார் அவர்கள் விரும்பினார்கள்.

உடன்படிக்கையின் போது, பெருமானாருடன் சென்றவர்கள் எல்லோரும் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி பெருமானார் அவர்களுடன் 2000 முஸ்லிம்கள் சென்றார்கள்.

உடன்படிக்கையின் நிபந்தனைப்படி ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது. ஆகையால், மக்காவுக்கு எட்டு மைல் முன்னதாக மர்ருஸ் ஸஹ்ரான் அருகே ஒரு பள்ளத்தாக்கில், ஆயுதங்களை எல்லாம் வைத்து, அவற்றைக் காவல் புரிய சில வீரர்களை நியமித்து விட்டு, மற்றவர்கள் மக்காவுக்குச் சென்றார்கள்.

புனித யாத்திரையை (உம்ரா) நிறைவேற்றப் பெருமானார் அவர்கள் தங்கள் கூட்டத்தாருடன் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், குறைஷிகள் மனம் பொறாதவர்களாய், மக்கா நகரைக் காலி செய்து விட்டு, அருகே உள்ள குன்றுகளிலும், இதர பகுதிகளிலும் போய்த் தங்கி, நடைபெறப் போகும் சடங்குகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.