பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201



150. பகைவரின் தூதருக்கு அவமரியாதை

முஸ்லிம் தூதர் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றதும், குறைஷிகள் தங்கள் தவறை எண்ணி வருத்தப்பட்டார்கள்.

தலைவர்கள் கூடி ஆலோசித்தார்கள், ஹுதைபிய்யா உடன்படிக்கையைப் புதுப்பிப்பதே நல்லது எனத் தீர்மானித்து, அதற்காகப் பெருமானார் அவர்களிடம் அபூ ஸுப்யானைத் தூது அனுப்பினார்கள்.

அபூ ஸுப்யான் மதீனா சென்றதும், முதலில் தம் புதல்வியும், பெருமானார் அவர்களின் மனைவியுமான உம்மு ஹபிபா நாச்சியார் வீட்டுக்குச் சென்றார். அவரோ, தம் தந்தையைப் பிரியத்தோடு வரவேற்கவில்லை. தவிர, அவர் உட்காரப் போன கம்பளத்தை எடுத்து மடித்து வைத்து விட்டார்.

தம் புதல்வியின் இந்தப் போக்கைக் கண்டு வியப்படைந்து, “என்னருமை மகளே! இந்தக் கம்பளத்தில் என்னை உட்கார விடாமல், அதை எடுத்து, மடித்து வைத்து விட்டாயே, ஏன்?” என்று கேட்டார் அபூ ஸுப்யான்.

அதற்கு, “இது நபிகள் பெருமானார் அவர்கள் அமரும் கம்பளம். புனிதமான அந்தக் கம்பளத்தில், உம்மைப் போன்ற சிலை வணக்கத்தார் உட்காரக் கூடாது. அதனாலேயே அதை எடுத்து மடித்து வைத்தேன்” என்றார் உம்மு ஹபிபா.

அதன் பின், அபூ ஸுப்யான் பெருமானார் அவர்களைக் காணச் சென்றார். அவர்களோ, அவரை வரவேற்கவும் இல்லை; முகம் கொடுத்துப் பேசவும் இல்லை.

அடுத்து அபூக்கர், உமர், அலீ (ரலி-அன்ஹும்) முதலானோரிடம் சென்றார். அவர்களோ அபூ ஸுப்யானைப் பொருட்படுத்தவே இல்லை.

ஏமாற்றம் அடைந்த அபூ ஸுப்யான் மதீனா பள்ளி வாசலுக்குச் சென்று, “நாங்கள் முஸ்லிம்களுடனும் மற்றவர்களுடனும் சமாதானமாக வாழ விரும்புகிறோம். அதற்கு அவர்கள் இணங்கவில்லை” என வெளிப்படையாகக் கூறினார்.