பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206



அப்பாஸ் அவர்கள், அவரைக் காப்பாற்றும்படிப் பெருமானார் அவர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

பெருமானார் அவர்கள் காப்பாற்றுவதாகக் கூறி, இரவு அப்பாஸ் அவர்களுடன் தங்கியிருந்து, காலையில் வருமாறு கூறினார்கள்.

அபூ ஸுப்யான் இரவு முழுதும் அப்பாஸ் அவர்களுடன் தங்கியிருந்து, காலையில் பெருமானார் அவர்கள் முன்னே வந்தார்.

அவரைப் பார்த்து, “அபூ ஸுப்யானே, அல்லாஹ்வைத் தவிர, வணங்கத் தக்க ஆண்டவன் வேறு யாரும் இல்லை என்பதை இப்பொழுதாவது தெரிந்து கொண்டீரா?” என்று கேட்டார்கள்.

“வேறு ஆண்டவன் இருந்தால், எங்களுக்கு உதவி இருப்பானே” என்று பணிவோடு பதில் அளித்தார் அபூ ஸுப்யான்.

“நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை, இன்னும் நீர் தெரிந்து கொள்ளவில்லையா” என்று கேட்டார்கள் பெருமானார் அவர்கள்.

“என் தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம்! இதில்தான் எனக்குச் சிறிது சந்தேகம் இருக்கிறது” என்றார் அபூ ஸுப்யான்.

“அபூ ஸுப்யானே! அல்லாஹ்வைத் தவிர, வேறு நாயன் இல்லை; முஹம்மது அவனுடைய திருத்தூதர் ஆவார்கள் என்று இப்பொழுதாவது ஏற்றுக் கொள்ளும்” என்று ஹலரத் அப்பாஸ் கூறவே, அபூ ஸுப்யான் கலிமாவைச் சொன்னார்.


155. எதிரிகளுக்கு அளித்த விதிவிலக்கு

பெருமானார் அவர்களிடம், “அபூ ஸுப்யான் கெளரவத்தில் மிகவும் பிரியமானவர். அவருக்கு ஏதாவது கண்ணியம் கொடுக்க வேண்டும்” என்று அப்பாஸ் அவர்கள் சொன்னார்கள்.

அதற்குப் பெருமானார் அவர்கள், “மக்காவாசிகளில், கஃபாவுக்குள் தஞ்சம் அடைந்தவர்களும், அபூ ஸுப்யான் வீட்டுக்குள் போய் இருந்து கொண்டவர்களும், அவரவர் வீட்டில் கதவைத் தாழிட்டுக் கொண்டிருப்பவர்களும், பாதுகாக்கப்படுவார்கள். வாளை உறையில் போட்டுக் கொண்டிருப்பவர்களுடனும் சண்டை செய்ய மாட்டோம்” என்றார்கள்.