பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22



போவேன். ஆண்டவன் அன்ஸாரிகள் மீது கருணை கொண்டு அவர்களையும் அவர்களின் பரம்பரையையும் வாழ்த்தட்டும்” என்று மிக உருக்கமாகப் பெருமானார் அவர்கள் கூறினார்கள்.

அதைக் கேட்டதும், அன்ஸாரின் உள்ளம் கனிந்தது. எங்களுக்கு முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் மட்டுமே வேண்டும்” என்று சொன்னார்கள்.

பெருமானார் அவர்களின் உண்மையான சொற்கள் அன்ஸாரிகளின் உள்ளத்தில் பதிந்து, அவர்கள் கண்கள் நீர் சொரிந்தன.


173. ஆறாயிரம் கைதிகளுக்கும் விடுதலை

ஹுனைன் சண்டையில் பிடிபட்ட ஆறாயிரம் கைதிகளையும், முஸ்லிம்கள் பங்குப்படி பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் கைதிகளை விடுவித்துக் கொண்டு போவதற்காக அவர்களின் உறவினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர், பெருமானார் அவர்களிடம் வந்தனர்.

அந்தத் தூதுக் குழுவினர் பெருமானார் அவர்களின் வளர்ப்புத் தாயாரான ஹலீமா அவர்களின் பனூ ஸஃது கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.

தூதுக் குழுவினரின் தலைவர் எழுந்து நின்று, பெருமானார் அவர்கள் முன்னிலையில், “ஆண்டவனுடைய தூதரே! நாங்கள் உங்களுக்கு உறவினர்களாயும், நெருங்கிய தொடர்புடையவர்களாயும் இருக்கிறோம். உங்களுடைய வளர்ப்புத் தாயாரான ஹலீமா அவர்கள் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அல் ஹாரிது, அந்நுஃமான் போன்ற குறுநில மன்னர்கள் எவரேனும் எங்கள் குடும்பத்தில் பால் அருந்தி இருந்தால், அவர்களிடம் கூட நாங்கள் தயவையும், கருணையையும் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் நீங்களோ, நம்பிக்கைக்குரியவர்களில் சிறப்பு மிக்கவர்கள். ஹூனைன் சண்டையில் சிறைப்பட்ட பெண்களில் உங்களுடைய சிறிய தாயார்களும், மாமியார்களும் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

16