பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

239



அவர்களைக் கண்டு மகிழ்ந்து உரையாடி, இஸ்லாத்தைத் தழுவினார்கள். -

ஹிஜ்ரி ஒன்பதாவது வருடத்திலேதான் அத்தகைய தூதுக் குழுகள் அதிகமாக வந்தன. ஆகையால், அந்த வருடத்திற்கு வரலாற்றுப் பேராசிரியர்கள் “தூது வருடம்” எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.


187. ஆடம்பரமும் அகம்பாவமும் அடங்கியது

பனூ தமீம் என்னும் கோத்திரத்தார். மிகவும் ஆடம்பரத்தோடு மதீனாவுக்கு வந்து, நேராகப் பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். முக்கியமானவர்கள் பலரும் அக்கூட்டத்தில் சேர்ந்து தூது வந்திருந்தார்கள்.

இஸ்லாத்தில் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் வந்திருந்த போதிலும், அவர்களுக்கு இயல்பாயுள்ள ஆடம்பரமான அகம்பாவம் மேலோங்கி இருந்தது.

பள்ளிவாசலை ஒட்டியுள்ள பெருமானார் அவர்களின் இல்லத்தின் முன் நின்று, “முஹம்மதே வெளியே வாருங்கள்” என்று கண்ணியமின்றி அழைத்தார்கள்.

பெருமானார் அவர்கள் வெளியே வந்தார்கள்.

அப்போது அக்கூட்டத்தார், பெருமானார் அவர்களிடம், “முஹம்மதே! எங்களுடைய பெருமையை எடுத்துச் சொல்வதற்காக, நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம்; எனவே, எங்கள் கவிஞருக்கும், பிரசங்கிக்கும் அனுமதி கொடுங்கள்” என்றார்கள்.

பெருமானார் அவர்கள் அதற்குச் சம்மதித்தார்கள்.

தங்கள் கூட்டத்தாரிடம் வாக்குத் திறமையுள்ள உதாரிது என்பவரை அழைத்து, தங்கள் பெருமையை எடுத்துச் சொல்லும்படி கூறினர்.