38
இறை வெளிப்பாடு வந்த பின்னர், தம் குடும்பத்தினர் அனைவருக்கும் பெருமானார் அவர்கள் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
அவ்விருந்துக்கு அப்துல் முத்தலிபு அவர்களின் சந்ததியினர் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
பெருமானார் அவர்களின் தந்தையின் சகோதரர்களான அபூதாலிப், ஹம்ஸா, அப்பாஸ் முதலானோர்களும் அங்கே வந்திருந்தனர்.
உணவுக்குப் பின்னர், பெருமானார் அவர்கள் எழுந்து நின்று, அங்கு வந்திருந்தவர்களை நோக்கி,
“இம்மையிலும் மறுமையிலும் நீங்கள் பெரும் பயன் அடையத் தக்க சிறந்த விஷயங்களை நான் கொண்டு வந்துள்ளேன். இப்பெரும் பொறுப்புகளைத் தாங்கி, என்னுடன் ஒத்துழைத்து, எனக்கு உதவியாயிருப்பவர்கள் யார்?” என்று கேட்டார்கள்.
எவருமே பதில் கூறாமல் மெளனமாயிருந்தார்கள்.
அப்பொழுது, பத்து வயது பாலகராம் அலி எழுந்து நின்று, “நபி பெருமானாரே! நான் உங்களுக்கு உதவியாயிருப்பேன்” என்றார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சிலர் எள்ளி நகையாடினர்.
விக்கிரக வணக்கத்தைப் பற்றி பெருமானார் அவர்கள் பகிரங்கமாகக் கண்டனம் செய்வது, குறைஷிகளுக்கு மிகுந்த கோபத்தையும், வருத்தத்தையும் உண்டாக்கிற்று.
மக்காவிலுள்ள கஃபாவை குறைஷிகள் மிகவும் புனிதத் தலமாகக் கொண்டாடி வந்தார்கள். அதன் மேற்பார்வை அவர்களிடம் இருந்ததால், அரேபியா முழுதும் மிகுந்த கெளரவமும் மதிப்பும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.