பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47



“மேன்மை மிக்க அரசர் அவர்களே! எங்களுடைய நிலைமையைச் சற்று கருணையோடு கேட்பீர்களாக. நாங்கள் மூட நம்பிக்கையிலும், அநாகரிகத்திலும் மூழ்கி இருந்தோம்; மரம், கல், உலோகத்தினால் உருவாக்கப்பட்ட விக்கிரகங்களை வணங்கி வந்தோம். செத்த பிராணிகளை உணவாக உண்டு கொண்டிருந்தோம். பெண்களைக் கொல்வதைப் பெருமையாக எண்ணி வந்தோம். அன்பு, உபசரிப்பு, மனிதாபிமானம் இவை எங்களிடம் அறவே கிடையாது. அவதூறான சொற்களையே எப்போதும் பேசிக் கொண்டிருந்தோம். எந்தவிதமான சட்ட திட்டங்களுக்கும் நாங்கள் உட்பட்டு நடக்காமல், பலாத்காரமும் வன்முறைச் செயல்களுமே அறிந்திருந்தோம். சுருக்கமாகச் சொன்னால், மிருகங்களைப் போலவே நாங்கள் காலம் கழித்தோம்; அத்தகைய தாழ்ந்த நிலையிலிருந்த எங்களிடம் கருணை கொண்டு எங்களுக்கு நல்வழி காட்டுவதற்காக, இறைவன் எங்களிலிருந்தே ஒருவரை அனுப்பினான். அவர்கள் பெயர் முஹம்மது. அவர்கள் ஹலரத் அப்துல்லாஹ்வின் குமாரர்; அப்துல் முத்தலிபின் பேரர்; அபூதாலிபின் சகோதரர் குமாரர். அவர்களுடைய உயர்குடிப் பிறப்பையும், உள்ளத் தூய்மையையும், சத்தியத்தையும், நல்ல நடத்தையையும், மனித இனத்தின் மீது அவர்களுக்கு உள்ள கருணையையும் நாங்கள் நன்கு அறிந்தோம். 'ஆண்டவன் ஒருவனே என்றும், அவனுக்கு இணையாக மற்ற எதையும் கருதக் கூடாது’ என்றும் வற்புறுத்திக் கூறியதோடு தாம் ஆண்டவனுடைய நபி என்பதை ஏற்கும்படியும் அவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறினார்கள். விக்கிரக வணக்கம் கூடாது எனக் கண்டித்தார்கள்.

“உண்மையே பேசுமாறும், சொன்ன சொல்லைக் காப்பாற்றும்படியும், இரக்கம் உள்ளவர்களாக இருக்குமாறும், மற்றவர்களுக்கு உரிய கடமைகளைச் சரிவரச் செய்து நிறைவேற்றும்படியும் எங்களுக்குக் கற்பித்தார்கள்.

“பெண்களை இழிவு படுத்திக் கேவலமாக நடத்தக் கூடாது; அநாதைகளின் பொருள்களை அபகரிக்கக் கூடாது என்றும் பாவச் செயல்களிலிருந்து விலகி, ஆண்டவன் ஒருவனையே வணங்கும்படியும், அவன் வழியில் ஏழைகளுக்கு உதவி