பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


 அவனோ ஒர் இடத்தில் உற்சாகமாய், கேளிக்கையில் ஈடுபட்டிருந்தான். உடனே அவன் மீது அம்பை எய்து அவன் தலையைக் காயப்படுத்தி விட்டார்.

அதன் பின்னர்,உடனே கஃபாவுக்குப் போய், பெருமானார் அவர்களைக் கண்டு, “முஹம்மதே! கவலைப்படாதீர்! உம்மைத் தாக்கியவனைப் பழி வாங்கி விட்டேன்” என்றார்.

“எப்படி?” என்று கேட்டார்கள் பெருமானார் அவர்கள்.

“அம்பு எய்து, அந்த மூடனின் தலையை உடைத்து விட்டேன்” என்றார் ஹம்ஸா,

“என் அருமைச் சிறிய தந்தையே! இஸ்லாத்திற்கு விரோதமாயிருப்பவர்களைப் பழி வாங்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. அவர்களைத் துன்புறுத்துவதிலும் எனக்குப் பிரியம் இல்லை. ஆனால் நீங்கள் இஸ்லாத்தில் சேர்வதுதான் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்” என்று பெருமானார் அவர்கள் கூறினார்கள்.

உடனே ஹம்லா அவர்கள், “அதே நோக்கத்தோடுதான் நான் இங்கே வந்தேன்” என்று கூறி, கலிமா ஒதி, இஸ்லாத்தில் சேர்ந்தார்கள்.


36. கொலைச் செயலுக்குப் பரிசா?

ஹம்ஸா அவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்த செய்தியைக் குறைஷிகள் அறிந்தனர். அதனால் முன்னிலும் அதிகமாக வருத்தம் அடையலானார்கள்.

இஸ்லாத்தின் வளர்ச்சியை எவ்வாறு தடுப்பது என அவர்கள் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் கூடி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

பெருமானார் அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் குறைஷிகள் அளவற்ற கொடுமைகளையும், இடையூறுகளையும் செய்தார்கள். அவற்றால் எவ்விதப் பயனையும் காணாமல் அலுத்துப் போய்விட்டனர்.