பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54



தம் கணவரைக் காப்பாற்ற முற்பட்ட சகோதரியை உமர் அடித்ததில், அவருக்கு இரத்தக் காயம் உண்டாயிற்று.

அந்த நிலையில், தம் சகோதரரைப் பார்த்து,"நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இஸ்லாம் எங்கள் மனத்தை விட்டு ஒருபோதும் அகலாது” என்று துணிவோடு கூறினார் சகோதரி.

சகோதரியின் இரத்தக் காயத்தையும், மன உறுதியையும் கண்ட உமர் உள்ளம் நெகிழலானார்.

அவர்களை அன்புடன் நோக்கி,"நீங்கள் ஓதிக் கொண்டிருந்ததை எனக்குக் காட்டுங்கள்” என்று கேட்டார் உமர். அங்க சுத்தி செய்து கொண்டு வந்த ஹலரத் உமரிடம் திருக்குர்ஆன் எழுதப்பட்ட சில தாள்களைக் கொண்டு வந்து, அச்சத்துடன் வைத்தார் சகோதரி.

அவற்றை ஓதி உணர்ந்ததும் உமர் உள்ளம் நெகிழ்ந்து, பரவசம் ஆனார்.


38. பகைவரின் மனமாற்றம்

சகோதரி வீட்டிலிருந்து உமர் மன அமைதியோடு, பெருமானார் அவர்கள் இருக்கும் இல்லம் நோக்கிச் சென்றார்.

அப்பொழுது பெருமானார் அர்க்கம் என்பவருடைய விசாலமான வீட்டில் இருந்தார்கள்.

துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்கள் பலர் அங்கே கூடி, தங்களுடைய வணக்கத்தை நிறைவேற்றி வந்தனர்.

அபூஜஹில் விடுத்த அறிவிப்பையும், உமர் வாளுடன் புறப்பட்டதையும், முஸ்லிம்கள் அறிந்து மிகவும் பயத்தோடு இருந்தார்கள்.

ஏனெனில், உமரின் சகோதரி வீட்டில் நிகழ்ந்தது எதுவும் எவருக்குமே தெரியாது

உமர் வந்து, அடைக்கப்பட்டிருந்த கதவைத் தட்டினார். அப்பொழுதும் அவர் கையில் வாள் இருந்தது.