71
அடுத்த ஆண்டு, ஹஜ் சிறப்பு நாளில், முன்பு வந்தவர்களில் சிலரும் ஒளஸ் கோத்திரத்திலிருந்த சிலரும் ஆக மொத்தம் பன்னிருவர் வந்தனர். அவர்களில் புதிதாக வந்தவர்களும், உடனேயே இஸ்லாத்தில் சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் பெருமானார் அவர்களிடம் சில வாக்குறுதிகள் அளித்தனர். அவை பின்வருமாறு:
1. நாங்கள், இறைவனுடன் வேறு யாரையும் இணை வைப்பதில்லை.
2. விபசாரம், களவு செய்வதில்லை.
3. மக்களைக் கொல்வதில்லை.
4. நபி அவர்களை முழுமையாகப் பின்பற்றுவோம்.
5. சுக துக்கங்களில் அவர்களுடன் உண்மையாக இருப்போம்.
இவ்வுறுதி மொழி நிறைவேறியதும், இஸ்லாத்தின் கொள்கைகளைத் தங்கள் நாட்டில் பரப்புவதற்காகப் பெருமானார் அவர்களின் சீடர்களில் ஒருவரைத் தங்களோடு அனுப்பி வைக்குமாறும் வேண்டிக் கொண்டனர்.
அவ்வாறே முஸ்அப் இப்னு உஹைமர் என்பவரை, அவர்களுடன் பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
முஸ்அப் யத்ரிபுக்குச் சென்று அஸ்அது என்பவரின் இல்லத்தில் தங்கி, தினந்தோறும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று, ‘திருக்குர்ஆனை’ ஓதிக் காட்டி, இஸ்லாத்துக்கு அழைப்பார்கள், தினமும் ஓரிருவர் என பலர் இஸ்லாத்தில் சேர்ந்தனர். சில நாட்களிலேயே யத்ரிபிலிருந்து குபா வரையிலும் இஸ்லாம் பரவிவிட்டது.
மறு வருடம் ஹஜ் நாளில், எழுபத்து மூன்று புதிய முஸ்லிம்களும், முஸ்லிம் ஆகாத வேறு சிலரும் யத்ரிபிலிருந்து மக்காவுக்கு வந்தனர்.