பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75



துரத்தி விட வேண்டும் என்று, கூறினர் சிலர். கொலை செய்து விட வேண்டும் என்று யோசனை கூறினார்கள் சிலர். இறுதியாகக் கொலை செய்து விடுவது என்றே தீர்மானித்துவிட்டனர்.

ஆனால், யாராவது தனிப்பட்டவர் கொலை செய்தால், அந்தப் பழி அவரைச் சார்ந்து விடும். அதோடு அவரைப் பெருமானார் அவர்கள் குடும்பத்தினர் பழிக்குப் பழி வாங்க நேரிடும் என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டாயிற்று.

ஆகையால், “இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒவ்வொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கையில் வாளேந்திச் சென்று பெருமானாரைக் கொன்று விட்டால், அந்தப் பழியானது, எல்லோரையும் சார்ந்து விடும். அதனால், அவர்கள் அவ்வளவு பேரையும் பழி வாங்க இயலாது” என யோசனை தெரிவித்தான் அபூஜஹில். இந்த யோசனையைக் கூட்டத்தார் ஆமோதித்தார்கள்.

உடனே தேவையான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்த இரவில், அவர்கள் எல்லோரும் கையில் வாள் ஏந்திச் சென்று, பெருமானார் அவர்கள் வசிக்கும் இடத்தைச் சூழ்ந்து கொண்டு பெருமானார் அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதை ஆவலோடு எதிர் நோக்கி வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.


55. புறப்படும்படி கட்டளை

ஆண்டவனுடைய கட்டளையை நாயகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பெருமானார் அவர்களைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்வதாகவும், தங்களிடம் வந்து தங்கும்படியும் மக்காவின் சுற்றுப்புறத்தில் உள்ள முஸ்லிம்கள் வேண்டிக் கொண்டனர். ஆனால் அவர்களுடைய கோரிக்கைகளுக்கெல்லாம் பெருமானார் அவர்கள் இணங்கவில்லை.